உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரானிய அமெரிக்க செய்தியாளரான ரோக்ஸானா சபரிக்கு இரானிய நீதிமன்றம் ஒன்று 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.
இந்த வழக்கு தனியறையில் நடத்தப்பட்டது. வழக்கின் ஆதாரங்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்த தண்டனையை மிகவும் கடுமையான தண்டனை என்று பிபிசி கூறியிருக்கின்றது. சபரி முன்னர் பிபிசிக்காக செய்திகளை வழங்கியிருந்தார்.
இந்த வழக்கின் முடிவுகள் குறித்து இரானிய நீதியமைச்சில் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை.
கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட சபரி அவர்கள், முதலில் சட்டவிரோதமாக பணியாற்றுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு அமெரிக்காவுடனான உறவுகளில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று இரானில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.
BBC.