22.11.2008.
இலங்கை இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவிட்டபோதும் இராணுவ வெற்றியானது இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்காது என இந்தியா உறுதியாக நம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன..
இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ ரீதியாக வெற்றி கிடைத்தாலும் பயங்கரவாதம் ஆபத்தானது என்பதால் பக்கவிளைவுகள் கூடுதலாக இருக்கும் என இந்திய மத்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இனப்பிரச்சினை குறித்து அரசியல் ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னமும் போதியளவும் காலஅவகாசம் இருப்பதால், இனப்பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டுமெனவே இந்தியா விரும்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கிளிநொச்சி மீட்கப்பட்டாலும் அது, பிரச்சினைக்கான தீர்வாக அமையாது. அது வெற்றி மாத்திரமே தீர்வு அல்ல. பயங்கரவாதத்தின் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும்” என புதுடில்லி வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னணியில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் இல்லையென இந்தியா கருதுகின்றபோதும், இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வுகாணமுடியாதென நம்புவதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுத் திட்டமே தீர்வாக அமையுமெனவும் புதுடில்லி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாகக்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.