தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களை இலங்கை அரசு திட்டமிட்ட சிங்கள பௌத்தக் குடியேற்றங்கள் ஊடாக ஆக்கிரமித்து வருகின்றது. வன்னிப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் தொழில்முறைக் கொலையாளியான மகிந்த ராஜபக்சவின் அதிகாரம் உலகின் ஏகபோக அரசுகளின் துணையோடு பலப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வடக்கையும் கிழக்கையும் தெற்காசியாவின் பெரும் இராணுவ மையங்களாக உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இராணுவ மையங்களின் தலைமையகமாக யாழ்ப்பாணமும் திருகோணமலையும் உருவாகி வருகிறது. கொழும்பும் புறநகர்ப் பகுதியும் உலகின் பல்தேசியக் கொள்ளையர்களின் சொர்க்க புரியாக மாறிவருகின்றது. உல்லாசப் பயணம், பணப்பதுக்கல், மில்லியன்கள் பெறுமதியான கட்டடங்கள், சூதாட்ட மையங்கள், களியாட்ட விடுதிகள் என்று தெற்கு மாறி வருகிறது.
இராணுவத்தின் அடிமைப் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள வடக்கிலும் கிழக்கிலும் பாடசாலைகளில் இராணுவப் பயிற்சித் திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிங்கள இராணுவத்திற்குச் சேவையாற்றும் அடிமைச் சமூகம் ஒன்றை உருவாக்கி இனச்சுத்திகரிப்பைத் தொடரும் மகிந்த ராஜபக்சவின் கொலைப்படைகள், பாடசாலை நேரங்களில் இந்த இராணுவப் பயிற்சியை நடத்துகின்றன.