நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடித்துக்கொண்டு போவதற்காகவுமே இந்த மர்ம மனித நாடகத்தை மஹிந்த அரசு நாடெங்கிலும் அரங்கேற்றி வருகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
கிழக்கில் மாத்திரமன்றி, இப்போது தெற்கு மற்றும் கொழும்பிலும் மர்ம மனிதர்களைக் கைதுசெய்து மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள், இந்த புனித ரமழான் மாதத்தில் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபவர்கள். ஆனால், இந்தப் பிரச்சினையால் பெண்களை வீடுகளில் தனியேவிட்டு ஆண்களால் பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாதுள்ளது. இதனால், ரமழான் மாதத்தின் சிறப்பு மழுங்கடிக்கப்படுகின்றது.
கிழக்கில் உள்ள மர்ம மனிதர் அட்டகாசம் தெற்கு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் விரிவடைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.
கிண்ணியாவில் மக்களை மிரட்டுவதற்காக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு யுத்த தாங்கிகள் நிறுத்தப்பட்டன. மர்ம மனிதர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்காது மக்களிடமிருந்து மர்ம மனிதர்களைப் பாதுகாக்கும் வேலையைத்தான் அரசு செய்கின்றது.
இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்தி மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியாத அரசால் எப்படி முழு நாட்டுக்கும் பாதுகாப்பை வழங்கமுடியும்?
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடித்துக்கொண்டு போவதற்காகவுமே இந்த மர்ம மனித நாடகத்தை மஹிந்த அரசு நாடெங்கிலும் அரங்கேற்றி வருகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.