பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படுவதை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கலகா சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் கொழும்பு – கண்டி பாதையை இடைமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவப் பயிற்சியை வழங்கும் அரசாங்கம் அதனை தலைமைத்துவ பயிற்சி என்று கூறுவதாக இதில் பங்கேற்ற மாணவர்கள் குற்றம் சுமத்தினர்.
இந்த பயிற்சிகளின் போது கடந்த வருடம் பலர் காயங்களுக்கு உள்ளானபோதும் அரசாங்கம் அவர்களுக்கு நட்டஈடுகளை வழங்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சுமத்தினர்.
எதிர்வரும் டிசம்பர் இறுதியில் பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்க அரசாங்கம் தயாராகும் நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.