அமெரிக்கப் படைகள் இராக்கில் நடத்தி வந்த போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31, 2010 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக” அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி இராக்கிலிருந்து வெளியேறியது. இந்த நடவடிக்கைகள் மூலம், “இராக் தற்பொழுது சுதந்திரமான சுயாதிபத்தியமுள்ள நாடாக ஆகிவிட்டதாகவும், இராக்கிற்கு விடுதலை பெற்றுத் தரும் தனது நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாகவும்” உலக நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது, இராக் போர் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக அறுவடை செய்து கொள்ளும் தந்திரத்தோடு, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்தார். இப்பொழுது இந்தப் படை விலக்கத்தைக் காட்டி, அமெரிக்க மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார், அவர். ஆனால், இந்தப் படைவிலக்கம் குறித்த செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தாலே, இதுவொரு மோசடி நாடகம் என்பதைப் பாமரர்கள்கூடப் புரிந்து கொள்ளலாம்.
இராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிக்கப் படை அமெரிக்காவிற்குத் திருப்பியனுப்பப்படவில்லை. இராக்கிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்துள்ள குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறது. 1990-இல் அமெரிக்கா இராக் மீது போர் தொடுத்தபொழுது, அமெரிக்கப் படைகள் குவைத் வழியாகத்தான் இராக்கிற்குள் நுழைந்தன என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வெளியேற்றத்திற்குப் பிறகும் இராக்கில் 50,000 முதல் 70,000 துருப்புகள் வரை அடுத்த ஆண்டு வரை தங்கியிருப்பார்கள் என்றும், இத்துருப்புகள் ‘தீவிரவாதிகளை’ எதிர்த்துப் போராடுவதற்கு இராக் இராணுவத்திற்கு உதவி செய்வார்கள் என்றும் அறிவித்திருக்கிறது, அமெரிக்க அரசு.
அமெரிக்க அதிபர் வாக்களித்துள்ளபடி இத்துருப்புகள்கூட இராக் நாட்டிலிருந்து அடுத்த ஆண்டே விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அதனால் இராக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்துவிட்ட தாகக் கருதிவிட முடியாது. ஏனென்றால், அமெரிக்க அரசால் இராக்கில் நுழைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தனியார் கூலிப் படைகள் வெளியேறுவது பற்றி ஒபாமா வாயே திறக்க மறுக்கிறார்.
இதற்கும் மேலாக, இராக் நாட்டை தனது நிரந்தர இராணுவத் தளமாக மாற்றும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். இதன்படி, இராக்கிலுள்ள பாலாத் என்ற ஊருக்கு அருகே 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 20,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும், அல்-அஸாத் என்ற ஊருக்கு அருகே 17,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும் அமைத்து வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த இரண்டு தளங்களையும் சேர்த்து, இராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக 94 இராணுவத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.
இதுவொருபுறமிருக்க, அமெரிக்க இராணுவத் தலைமை பீடமான பென்டகனின் திட்டப்படி, இராக்கிலிருந்து வெளியேறியுள்ள படைக்கு ஈடாக மற்றொரு படையை இராக்கில் இறக்கிவிட்டுள்ளது, அமெரிக்கா. அரசு தந்திர நிபுணர்கள், பொருளாதார ஆலோசகர்கள், சமூக சேவகர்கள் என்ற போர்வையில் நுழைந்துள்ள இந்த அரசியல் படையின் கண்ணசைவிற்குத் தகுந்தபடிதான் இராக் பொம்மையாட்சி நடக்கும். இதற்குத் தகுந்தபடி இராக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் 800-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம்தான் அந்நாட்டில் ஆட்சி அதிகார மையமாக இருக்கும்.
அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்த பிறகு, தனது மேலாதிக்க நலன்களுக்குத் தகுந்தவாறு படைபல ஒப்பந்தமொன்றை உருவாக்கியது. இந்த ஒப்பந்தம்தான் இன்று இராக்கின் எழுதப்படாத சட்டத் தொகுப்பாக விளங்குகிறது. இந்தச் சட்டத்தின்படி, இராக்கின் வான்வழிப் பாதையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இராக்கிற்கு கிடையாது. அந்த அதிகாரம் இந்த ஒப்பந்தத்தின் வழியாக அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இராக்கை நேரடியாக ஆக்கிரமித்த பின், அதன் எண்ணெய் வளத்தில் 60 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது. சதாம் உசேன் ஆட்சியின்பொழுது நாட்டுடமையாக்கப்பட்டிருந்த இராக்கின் எண்ணெய் வயல்களைத் தனியார்மயமாக்கி, அவற்றை அமெரிக்க எண்ணெய்க் கழகங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது என்ற உண்மை இந்தக் கைப்பற்றல் மூலம் மீண்டும் பளிச்சென அம்பலப்பட்டிருக்கிறது.
இராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதற்கு அமெரிக்க முதலாளிகளுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம்தான், இராக்கின் சுதந்திரமாகவும் விடுதலையாகவும் புரட்டிக் கூறப்படுகிறது. இராக்கில் நுழைந்துள்ள இந்த அமெரிக்க ஏகபோக எண்ணெய் கழகங்களின் சொத்துரிமையை, சுரண்டலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமே, இராக்கின் அரசியல் சாசனச் சட்டமாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, இராக்கின் எண்ணெய் வயல்களுள் பெரும்பாலானவை அமைந்துள்ள குர்து இன மக்கள் வசித்து வரும் பகுதி, அதிக அதிகாரங்கள் கொண்ட மாகாணமாக உருவாக்கப்பட்டுள்ளது. சதாமை எதிர்த்து நீண்ட காலமாகப் போராடி வந்த குர்து இன மக்களுக்கு அரசியல் உரிமைகள் அளிப்பது இதன் நோக்கமல்ல. மாறாக, அங்குள்ள எண்ணெய் வயல்களைக் கைப்பற்றியுள்ள அமெரிக்காவின் வர்த்தகச் சுதந்திரத்தில் இராக்கின் மைய அரசு தலையீடு செய்வதைத் தடுப்பதுதான் இம்மாகாண சுயாட்சியின் நோக்கம்.
இராக் மக்களுக்கு இந்த ‘சுதந்திரத்தையும் விடுதலையையும்’ வழங்குவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுவரை ஏறத்தாழ 10 இலட்சம் இராக்கியர்களின் உயிரைப் பறித்திருக்கிறது; ஏறத்தாழ 50 இலட்சம் இராக்கியர்களை அகதிகளாக சொந்த நாட்டிலிருந்து துரத்தியடித்திருக்கிறது; ஏறத்தாழ 27 இலட்சம் இராக்கியர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கியிருக்கிறது; 1,000 டன்னுக்கும் அதிகமான செறிவுகுறைந்த யுரேனியம் அணுகுண்டுகளை அந்நாட்டின் மீது வீசி, அந்நாட்டையே நஞ்சாக்கியிருக்கிறது; தனது காலனியாதிக்க நலன்களுக்காக ஷியா – சன்னி – குர்து ஆகியோருக்கிடையே பிளவைத் தூண்டிவிட்டு மோதவிடுவதன் மூலம், சமூக அமைதியையே சீர்குலைத்துவிட்டது.
சதான் உசேன் சர்வாதிகார ஆட்சி நடத்தினார் என்றால், அவரைத் தூக்கிலிட்டுவிட்டு அமெரிக்கா இராக் மீது திணித்துள்ள ‘ஜனநாயக’ ஆட்சியோ பேராசை பிடித்த ஊழல் பேர்வழிகளின், சொந்த நாட்டையே கொள்ளையடிக்கும் மோசடிப் பேர்வழிகளின் கூடாரமாக இருப்பதை முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்தி வருகின்றன.
2,500 ஆண்டு கால பழமை வாய்ந்த மெசபடோமியா நாகரிகத்தின் வரலாற்றுச் சின்னங்களுள் பெரும்பகுதி, அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்த மறுநிமிடமே களவு போய்விட்டன. மீதி அமெரிக்கா மற்றும் நேடோ நாட்டுப் படைகளின் தாக்குதல்களால் குப்பை மேடாகிவிட்டன. பாபிலோனில் உள்ள வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடமொன்றை அழித்துவிட்டு, அங்கே தனது இராணுவ தளத்தைக் கட்டியமைத்திருக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். சிதைவடைந்து வரலாற்றுச் சின்னமாக இருக்கும் இடம் அழிக்கப்பட்டு, அங்கே அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் புகழ்வாய்ந்த வழிபாட்டுத் தலத்தை அழித்து, அதனிடத்தில் பதுங்கு குழிகளை அமைத்திருக்கிறது, போலந்து நாட்டுப் படை. பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிய இந்து மதவெறியைவிடக் கேடானது, குரூரமானது, காலனியாதிக்கவாதிகளின் இந்த வெள்ளையின வெறி.
அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தயாரித்துள்ள தேசியப் பாதுகாப்பு போர்த் தந்திரத் திட்டத்தின்படிதான் இராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி இன்று குவைத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறதேயொழிய, அதற்கு அப்பால் இதில் இராக் மக்களின் நலனோ, அமெரிக்க மக்களின் நலனோ அடங்கியிருக்கவில்லை.
மேற்காசியாவில் இராக்கிற்கு அடுத்து இரானிலும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற திட்டத்தோடு அலையும் அமெரிக்கா, உலக மக்களிடம் தனது நோக்கத்தை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இரான் இரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இரான் மீது அடுத்தடுத்துப் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகிறது.
சமீபத்தில், இரானுக்கு எந்த நாடும் பெட்ரோல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை விற்கக் கூடாதென்றும், இரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களை எந்தவொரு நாடும் கடலில் வழிமறித்துச் சோதனை செய்யலாம் என்றும் ஐ.நா. மூலம் கட்டளையிட்டுள்ளது, அமெரிக்கா. இரான் இதற்குப் பதிலடியாக, தனது கப்பல்கள் வழிமறித்துச் சோதனை செய்யப்பட்டால், ஹெர்மோஸ் ஜலசந்தி வழியாக மேற்குலக நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் தனது போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி இரானை அச்சமூட்டும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது, அமெரிக்கா.
ஆப்கானில் நடந்துவரும் ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கா வெற்றி பெறமுடியாது என்ற உண்மையை ஆப்கானில் அமெரிக்கப் படைத் தளபதியாக இருந்த ஸ்டான்லி ஏ.மெக்கிறிஸ்டல் சமீபத்தில் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார். இதனால் அவரை ஆப்கானில் இருந்து தூக்கியடித்து இவ்வுண்மையை மூடிமறைக்க முயன்றார், ஒபாமா. எனினும், இவ்வுண்மை இப்பொழுது வேறொரு வழியில் அம்பலமாகிவிட்டது.
அமெரிக்கா இராணுவத்தால் ஆப்கான் போர் பற்றி இரகசியமாக வைக்கப்பட்டிருந்த 76,000 ஆவணங்களை விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் சமீபத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியது. அந்த ஆவணங்களில் ஆப்கானில் அமெரிக்காவும் அதனின் கூட்டாளியான நேட்டோவும் நடத்தியுள்ள போர்க்குற்றங்கள் மட்டுமின்றி, ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்துவரும் போர் அந்நாட்டு மக்களின் ஆதரவோடு நடந்துவரும் உண்மையும் பதிவாகியிருக்கிறது.
இரான் மற்றும் சீனாவைக் கண்காணிப்பதற்கும், மத்திய ஆசியப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அந்நாடுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தைச் சுரண்டுவதற்கும் ஆப்கானில் ஒரு அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு உள்ளது. இதனால் ஆப்கான் போரில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என வெறியோடு அலையும் ஒபாமா, இப்பொழுது அங்கு புதிய செயல் உத்தியைக் கையாளத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் நேடோ துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது; தேசிய சமரசத் திட்டம் என்ற பெயரில் தாலிபானின் ஒரு பிரிவோடு சமரசம் செய்துகொண்டு ஆப்கானில் அமைதியை ஏற்படுத்துவது என்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அமெரிக்கா.
இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி குவைத்திற்கு இடம் பெயர்ந்திருப்பதை இந்தப் பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டும். ஆசியக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்ப படையணிகளை இடம்மாற்றி நிறுத்தியிருக்கும் இராணுவ உத்திதானே தவிர, இது படை விலக்கல் அல்ல.
எனினும், ஒபாமா தன்னைச் சமாதானத் தூதுவனாகக் காட்டிக் கொள்ளும் சாக்கில், இராக் போர் தவறானது என்றும் கூறி வருகிறார். இப்போர் தவறானது என்றால், இப்போருக்குக் காரணமான ஜார்ஜ் புஷ், டோனி பிளேர், ரம்ஸ்ஃபீல்டு உள்ளிட்ட அனைவரும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும். நாஜிக் குற்றவாளிகளைத் தண்டிக்க நூரம்பர்க் விசாரணை மன்றம் நிறுவப்பட்டதைப் போல இராக் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச விசாரணை மன்றம் ஏற்படுத்த ஒபாமா முன் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒபாமாவோ இதற்கு மாறாக, இராக்கை தனது மறுகாலனியாகத் தொடருவதற்கான – எந்த நோக்கத்திற்காக இராக் ஆக்கிரமிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்கான கட்டுமானத்தை உருவாக்குவதில்தான் அக்கறை காட்டுகிறார். இது அக்கருப்பின அதிபரின் கபடதனத்தைத்தான் அம்பலப்படுத்திக் காட்டுகிறது.
புதிய ஜனநாயகம் இதழிலிருந்து..
வெள்ள காட்டும் நாடகம் இங் கு ஏழை நாடெல்லாம் பாத்திரம்…இவர்கள் கள்ளக் குணத்தை தெரிந்தும் ஏமாறூம் மூன்றாம் உலகம்.இன்றூ பால்ராம் செனரய் வாங்கினாரே பந்து விளயாட்டுக் கழகம் அவருக்கும் போடுவாரே நாமம்.