இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் கிளிநொச்சியில் விவசாயிகளால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இரணைமடு விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
விவசாயச் செய்கைக்கு நீர் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் இரணைமடு குளத்திலிருந்து குடாநாட்டுக்கு நீர் விநியோகம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு கிளிநொச்சி விவசாயிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு நிலவிவருகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தமது அமைப்பு தீர்மானித்துள்ளதாக இரணைமடு விவசாய சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார்.
இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும், குடாநாட்டு – கிளிநொச்சி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் புரளியான செய்திகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டுவரும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முத்து சிவமோகன் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி விவசாயிகளை துரோகிகளாக அரச ஊடகம் வெளியிட்டுவரும் செய்திகளுக்கு எதிராகவும் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
நிலப்பறிப்பு, இராணுவமயமாக்கல், பண்பாட்டு சிதைப்பு போன்ற பல்வேறு இனச்சுத்திகரிப்பு
உக்திகளுக்கும் மத்தியில் பிரதேச முரண்பாடுகளை த்தூண்டும் வகையில் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் சதி செய்து வருகின்றனர்.