இன்டர்போல் காவல்துறையால் தேடப்படும் ஜெயந்தன் தர்மலிங்கம் என்பவர் பிராஞ்சுக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வன்னியிலிருந்து செய்ற்பட்டதாகக் கருதப்படும் ஜெயந்தன் வன்னிப் படுகொலைகளிலிருந்து மீண்டு பிரன்சிற்குச் சென்றுள்ளார். அங்கு இன்னும் அகதியாக அங்கீகரிக்கப்படாத நிலையில் இவர் கைது செய்யப்பட்டார். ஜெயந்தனின் அகதிகளுக்கான உதவித் தொகையை வேறு ஒருவர் பயன்படுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதும் அது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக போலிஸ் நிலையம் சென்றவரைப் போலிசார் கைதுசெய்துள்ளனர்.
அரசுகளிடையேயான போலிஸ் பாதுகாப்பு ஒத்துழைப்புகான நிறுவனமான இன்டர்போலிடம் ஜெயந்தன் குறித்த முறைப்பாட்டை இலங்கை அரசு வழங்கியிருந்தன் பின்னணியில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னதாக ஜெயந்தன் அரசியல் தஞ்சம் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதால் கைது செய்து சிறைவைப்பதற்கு அனுமதியில்லை என்ற அடிப்படையில் ஜெயந்தனை விடுதலை செய்யுமாறு அவரது வழக்கறிஞர் கோரியதைத் தொடர்ந்து அவர் விடுதலையானார்.
ஜெயந்தனின் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்படால் அவர் மீண்டும் கைது செய்யப்படும் நிலையிலேயே காணப்படுகிறார்.
இலங்கை அரச பாசிசம் வன்னிப் படுகொலைகளின் பின்னரும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுவருகிறது. தெற்காசியாவில் நேரடியான அரச பயங்கரவாத்தின் குறியீடாக இலங்கை அரசு திகழ்கிறது. இவை எதனையும் கருத்தில் கொள்ளாத இன்டர்போல் நிறுவனம் இலங்கை அரசிற்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இன்டர்போல் நிறுவனம் மட்டுமல்ல புலம் பெயர் புலிசார் பிழைப்பு வாதிகளும் பிரஞ்சு அரசு போன்ற ஏகாதிபத்திய அரசுகளின் அடியாட்கள் போன்றே செயற்படுகின்றனர். ஜெயந்தனைத் தொடர்ந்து மேலும் பல அரசியல் அகதிகள் இதேவகையான பாதிப்பிற்கு உட்படும் போது அதற்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூட உலகில் எவரும் அற்ற நிலையை இப் பிழைப்புவாதிகள் உருவாக்கியுள்ளனர்.
புலம் பெயர் பினாமிகள் புலிகளின் வெளிப்படையாகத் தெரிந்த குற்றச் செயல்களைக் கூட எந்த விமர்சனமுமின்றி நிராகரித்து அவை அவ்வப்போதான இராணுவத் தவறுகளே தவிர புலிகளின் அரசியலின் தவறல்ல என்று நிராகரிக்கின்றனர். இதனால் புலிகளின் அரசியல் என்பதை இராணுவச் செயல்கள் என்ற விம்பத்தை ஏகாதிபத்திய அரசுகளுக்கு வழங்கியவர்களே இவர்கள்தான்.
இதன் விளைவாக ஜெயந்தன் அரசியல் அகதி என்ற நிலையிலிருந்து இராணுவக் குற்றவாளியாக இனம்காட்டப்படும் நிலை உருவாகியுள்ளது.
புலிகளின் பாரிய குற்றங்களைக் கூட எந்த விமர்சனமுமின்றி நியாயப்படுத்தும் புலம் பெயர் பினாமிகள், உலகில் மனிதர்களின் அரசியல் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் ஜனநாய முற்போக்கு சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டுள்ளனர்.
ஏகாதிபத்தியக் கொலை அரசுகளின் ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிகொண்டு போராடும் மக்கள் பிரிவுகளை எதிரிகளாக்கிக் கொண்டவர்கள் இன்று அகதிகளுக்காகக் குரல்கொடுப்பதற்குக் கூட யாருமில்லை என்ற நிலயைத் தோற்றுவித்துள்ளனர்.
இவர்கள் ஈழத் தமிழர்களை இலங்கை அரசு அழிப்பதற்கு துணைசென்ற குற்றச் செயலுக்கு அப்பால் இன்று அகதிகளையும் அனாதைகளாக்கியுள்ளனர்.
புலிகள் தொடர்பான நியாயமான விமர்சனமும் சுயவிமர்சனமும் முன்வைக்கப்பட்டு ஈழத்
தமிழர்கள் பிரிந்துசெல்லும் உரிமைக்கான போராட்டம் மக்கள் சார்ந்ததாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக முன்னெடுக்கப்படும் வரைக்கும் அழிவுகளை நிறுத்தமுடியாது.