உலகின் ஆதிக்க நாடாக இருந்த அமெரிக்காவின் நிலை தற்போது சரிந்துள்ள சூழ்நிலையில் பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் “தேசிய புலனாய்வு அமைப்பு’ ராணுவ, பொருளாதாரத் துறைகளில் எதிர்காலத்தில் உலகில் உருவாக உள்ள புதிய போக்குகள் குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. “”உலகப் போக்குகள் 2025; உலகம் மாறுகிறது” என்ற தலைப்பிட்ட அந்த அறிக்கையில் எதிர்வரும் 15 ஆண்டுகளில் (2025 வரை) உலகம் எப்படியிருக்கும் என்பது குறித்த கணிப்புகள், தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை முன்வைக்கும் ஒரு கணிப்பு, பலரை குறிப்பாக, அமெரிக்க அதிகார வர்க்கத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த அறிக்கை எதிர்வரும் ஆண்டுகளில் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் மங்கி மறைந்து போகும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து இந்தக் கணிப்பை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக் மீது போர்களை நிகழ்த்தி, தனது ஆளுகைக்கு அந்த நாடுகளை உட்படுத்தியது அமெரிக்கா. மேற்கு ஆசியாவில் தனது செல்வாக்கைத் தளராமல் நீடித்துக் கொண்டது. 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் ராணுவத் தளங்களை வைத்துக் கொண்டு உலகை மிரட்டியது என பல வகைகளில் உலக மேலாதிக்கத்தை தனது கைகளில் உறுதிப்படுத்திக்கொண்டது. ஆனால், இந்த ஆதிக்கப் போக்கு தற்போது அஸ்தமனம் காண உள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ள புதிய தாராளமயம், அமெரிக்க கார்ப்பரேட் கூட்டத்துக்குத்தான் வல்லமையை ஏற்படுத்தியது. உலக உழைப்பாளி மக்களின் வேர்வையில், மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சூறையாடி, அமெரிக்க தலைமையிலான உலகப் பெருந்தனக் கூட்டம் வலுப்பெற்றது.
உலகப் பிரச்னைகளை நடுநிலையாக அணுகி, தீர்வுகள் காணும் நோக்கோடு உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் அனைத்தும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக மாறின. ஐக்கிய நாட்டுச் சபை புறந்தள்ளப்பட்டு, ஈராக் மீதான தாக்குதல்கள் இருமுறை நிகழ்ந்தன. உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், சர்வதேச வர்த்தக அமைப்பு அனைத்தும் அமெரிக்கா மற்றும் வல்லரசு நாடுகளைச் சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கான கருவிகளாக மாறின. உலக நடுவர்களாகச் செயலாற்ற வேண்டிய இந்த அமைப்புகள் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை உறிஞ்சும் அட்டைகளாக உருவெடுத்தன.
சோவியத் யூனியன் இருந்த காலம் முழுவதும் உலகம் இரு வேறு முகாம்களாகப் பிரிந்திருந்தது. பனிப்போர் நிகழ்ந்த காலமாக அது இருந்தது. அப்போது, அமெரிக்காவின் பொருளாதார, ராணுவ மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு சோவியத் யூனியன் ஒரு வேகத் தடையாக இருந்தது.
1992-ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டு போன நிலையில், உலகம் ஒரு துருவ உலகமாக மாறியது. அன்றைக்கு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் “”கடவுளின் கருணையால் பனிப்போரில் அமெரிக்கா வென்றது” என்று அளவிலாத சந்தோஷத்தோடு அறிவித்தார். அன்று தொடங்கிய இந்த ஒரு துருவ உலக மேலாதிக்கம், இன்றைய உலகந்தழுவிய பொருளாதார நெருக்கடியில் உலக மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், சிறிதும், பெரிதுமான பல போர்கள் நிகழ்ந்து, பல லட்சம் மக்களின் உயிர்ப்பலிக்கும் இந்த ஒரு துருவ உலக மேலாதிக்கம் காரணமாக அமைந்தது. இந்த ஒரு துருவ உலகம் அமெரிக்க மக்களுக்கும் எவ்வித நன்மையையும் ஏற்படுத்தவில்லை. 2008-ம் ஆண்டில் மட்டும் 26 லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் அதிகார உயர் நிலையில் இருக்கும் கார்ப்பரேட் கூட்டம் ஒரு துருவ உலக மேலாதிக்கத்தினால் பலன் பெற்றது.
கடந்த இருபது ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த இந்த ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்காவின் ஒரு முக்கிய புலனாய்வு அமைப்பே கண்ணீர் வடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இனி ஒரு புது ஆட்டம் நிகழவிருப்பதாக அந்த அறிக்கை கட்டியம் கூறுகிறது. ஒரு “பன்முக உலகு’ உருவாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உருவாக்கப்பட்ட உலக அமைப்புகளும், நடைமுறைகளும் “புரட்சிகரமான’ வகையில் மாறிடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. உலக அரசியல் அரங்கில் முக்கிய, முன்னணி ஆட்டக்காரர்களாக, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் திகழ்ந்திடும். அமெரிக்கா முக்கிய நாடாக விளங்கினாலும், அதன் முந்தைய பலம் பெருமளவு குறைந்திடும்.
உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக சீனா உருவெடுக்கும் எனவும், அதன் ராணுவ வலிமை அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் திகழ்ந்திடும்.
கீழ்த்திசை நாடுகளிலிருந்து மேற்கு உலகிற்கு செல்வம் சேர்ந்த வரலாற்றைத்தான் நாம் இதுவரை கண்டோம். காலனித்துவம் நிகழ்த்திய, “கிழக்கிலிருந்து மேற்கிற்கு’ எனும் சூத்திரம் மாறுகிறது. இனி, மேற்கிலிருந்து கிழக்கிற்கு செல்வம் சேர்ந்திடுகிற காட்சியை நாம் காண இருக்கிறோம்.
உலக உற்பத்தியிலும் மாற்றங்கள் ஏற்கெனவே நிகழ்ந்து வருகின்றன. உலக உற்பத்தியில் வளரும் நாடுகளின் பங்கு அதிகரித்து வருகிறது. 1990-ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் வளரும் நாடுகளின் பங்கு 38 சதம் மட்டுமே இருந்தது. தற்போது 48 சதமாக உயர்ந்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் வளர்ந்த நாடுகளை விட அதிக உற்பத்தியை வளரும் நாடுகள் சாதித்திடும் என “எகனாமிஸ்ட்’ பத்திரிகையின் தகவல் பிரிவு தெரிவிக்கிறது. ஆக, உலகத் தராசு இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டு வந்த நாடுகளின் தரப்பில் சாய்ந்து வருகிறது.
ஆனால், இவ்வாறு ஒரு துருவ உலகம் முடிவுக்கு வந்து, உருவாக இருக்கும் பல துருவ உலகு, உலக மக்கள் நலனுக்கு உகந்ததா? பல துருவ உலகில் பல அதிகார மையங்கள் தோன்றினால், உலகில் சமாதானம் நிலவிடாமல் முரண்பாடுகள் அதிகரிக்கும் என பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பல துருவ உலகம் பற்றிய பேச்சுகள் அடிபடத் தொடங்கிய நாளிலிருந்தே அமெரிக்க நிர்வாகம் அதனை எதிர்த்து வந்தது. வெளியுறவு அமைச்சராக இருந்த காண்டலீசா ரைஸ் பல்துருவ உலக அமைப்பு “”போரைத்தான் தாங்கிப் பிடிக்கும், அது அமைதி ஏற்படுத்த உதவிடாது” என்று கூறினார்.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அறிக்கையிலும் கூட பல்துருவ உலகு என்பது உலகில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “”19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஆயுதப் போட்டி, எல்லை விரிவாக்கம், ராணுவ மோதல்கள் ஆகியன பல்துருவ உலகில் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க மேலாண்மை அகன்று ஏற்படவிருக்கும் மாற்று உலகம், ஒரு வல்லரசுக்குப் பதிலாக, பல வல்லரசுகளின் மேலாதிக்கமாக உருவெடுத்துவிடக் கூடாது. அத்தகு நிலை ஏற்படுவது உலகுக்கு தீமையாகவே முடியும். பல அதிகார மையங்களைக் கொண்ட வல்லரசுக் கூட்டணிகள் உருவாவதும் உலக மக்களுக்கு நலன் பயக்காது.
உருவாகவிருக்கும் மாற்று உலகில், ஒரு தனிப்பட்ட வல்லரசுக்கோ அல்லது வல்லரசு கூட்டணிகளுக்கோ மேலாண்மை இருந்திடல் கூடாது. அதற்கு மாற்றாக, உலக உழைக்கும் மக்களின் மேலாண்மை மலர வேண்டும். காலம் காலமாக சொந்த நாட்டு அதிகாரக் கூட்டத்துக்கும், பிரிட்டன், அமெரிக்கா போன்ற மேலாதிக்கம் செலுத்திய கார்ப்பரேட் கூட்டத்துக்காகவும் உழைத்து வருகிற கோடானுகோடி மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்கான உலகாக மாற்று உலகு அமைய வேண்டும்.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு தனது அறிக்கையில் ஓர் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. வரும் 15 ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டாலும், எரிபொருள், உணவு, தண்ணீர் ஆகியவற்றில் கடும் பற்றாக்குறை நிலவும் என்றும், இதனால் மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என்று எச்சரித்துள்ளது. உருவாக இருக்கும் உலகம், ஜனநாயக, சமத்துவக் கோட்பாடுகள் அடிப்படையில் இயங்கும் உலகாக இருந்தால்தான் இந்த ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்.
இதற்கேற்ற வகையிலான சர்வதேச அமைப்புகள் உருவாக்கப்படல் வேண்டும். ஐக்கிய நாட்டு சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஜனநாயகமயமாக்கப்படல் வேண்டும். வளர்ந்த நாடு, வளரும் நாடு, ஏழை நாடு என்ற வித்தியாசமின்றி அனைத்து நாடுகளும் தங்களது குரலை எழுப்பும் வகையில் இந்த சர்வதேச மன்றங்களில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அனைத்து உலகப் பிரச்னைகளும் உலக மக்களின் நலனை மையமாகக் கொண்டு ஜனநாயக ரீதியில் தீர்வுகள் காணப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாட்டுப் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரத்தோடு ஒருங்கிணைப்பு கொண்டதாக இருப்பதில் தவறில்லை. ஆனால், இது பழைய தாராளமய, உலகமய பாணியில், பன்னாட்டு நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பாக இருந்திடக் கூடாது. மாறாக, உலகில் நாடுகளிடையேயும், நாட்டிற்கு உள்ளேயும் அதிகரித்துக் கொண்டு வருகின்ற ஏற்றத்தாழ்வை அகற்றி, சமத்துவம் நிலைநாட்டுவதற்கான பொருளாதார வளர்ச்சியாக அமைய வேண்டும். அதிகரித்து வரும் வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பன்முக உலகின் முதற் கடமையாக அமைதல் வேண்டும்.
அமெரிக்க புலனாய்வு அறிக்கை சீனாவின் அச்சுறுத்தலால் இந்தியா அமெரிக்காவோடு கேந்திர ரீதியான உறவை நீடித்துக் கொள்ளும் என ஆருடம் கூறுகிறது. இது சீனாவுக்கு எதிராக இந்தியாவைப் பயன்படுத்துவது என்ற முந்தைய ஜார்ஜ் புஷ் அரசின் கொள்கை வெளிப்பாடு. ஆனால், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியாவும், சீனாவும் பொருளாதார ஒத்துழைப்பையும், கூட்டுறவையும் அதிகரிக்கிறபோது, இரு நாட்டு மக்களுக்கும் அளவிலாத பலன்கள் கிட்டும். ஆசியாவிற்கே இது நன்மைகளை ஏற்படுத்தும். இதேபோன்று தற்போது வெனிசுலா, பொலிவியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் ஏற்படுத்தியுள்ள கூட்டமைப்புகளுக்கும் நல்ல பலன்களை ஏற்படுத்தும்.
எனவே, ஒரு துருவ உலக சகாப்தம் முடிவுக்கு வருவதை உலக மக்கள் வரவேற்க வேண்டும். அதேநேரத்தில் மாற்று உலகு பல துருவ உலகம் எனும் பெயரில் பல அதிகார மையங்களை ஏற்படுத்துவதாக அமைதல் கூடாது. ஒவ்வொரு நாட்டின் கடைகோடி குடிமகனும் அதிகாரம் பெற்றிடும் நிலையை ஏற்படுத்திட வேண்டும். அதுதான் இன்றைய உலகு. பொன்னுலகாக ஏற்றம் பெற்றிட, சிறந்த வழி. இதற்காக உலக மக்கள் விழிப்புடன் ஒன்று சேர்ந்து புது உலகு படைக்க குரல் எழுப்ப வேண்டும். அடுத்து, மேலாண்மை வகிக்கப்போவது மக்கள் சக்தியாகத்தான் இருக்க வேண்டும்.
-Dinamani