தமிழக வணிகமயப்பட்ட தமிழ்ச் சினிமாவிலிருந்து ஈழத் தமிழ்ச் சினிமா வேறுபட்டு புதிய உத்வேகத்தோடு எழுவதற்கு எழுபதுகளில் எடுத்த முயற்சி அப்போது உண்மையில் வெற்றி தரும் என்ற நம்பிக்கையைத் தந்தது. இன்று பொய்யாய்ப் பழங்கதையாக ஆகியுள்ளது. அன்று சிங்களத்தேசியத்தில் இருந்த (அங்கே இலங்கைத் தேசியம் இருக்கவில்லை) முற்போக்கு உணர்வு அதற்கு உதவியது. இன்று சிங்களப் பேரினவாதத்தால் ஏதோவொரு வகையிலும் அளவிலும் பீடிக்கப்பட்டவர்களால் ஈழத்தமிழ்ச் சினிமாவுக்கு உதவ இயலும் எனத்தெரியவில்லை. இந்த எண்ணமே முதல்நிலையில் “இனி அவன்” திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்டது. சிங்களத்தில் இதே இயக்குனர் இனவாதத்துக்கு எதிராக தனது படைப்பாக்கத்தைத் தந்தபோது நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.
அதுவே அரசியல் ரீதியாக மட்டுமன்றி இராணுவமயப்பட்டும் ஒடுக்கப்பட்டு யுத்தக் கொடூரங்களின் ரணங்கள் ஆறாத இனத்தின் வாழ்வைச் சொல்ல வரும்போது வேறொரு கோணத்திலிருந்து பேசப்பட வேண்டும். இங்கே இனவாதத்தைக் கடத்தல் எம்மத்தியிலான “ஆண்ட பரம்பரையில்” இருந்து விடுபடுவது மட்டுமல்ல; கொலைபாதகங்கள்-புறக்கணிப்புகள்-பண்பாட்டழிப்புகள்-உரிமைமறுப்புகள் என்பவற்றோடுள்ள பேரினவாதத்தை முறியடிக்கும் கடமையோடும் இணைந்தது. இதனை “இனி அவன்” கவனம் கொள்ளவில்லை.
ஒடுக்கப்பட்ட இனம் தனது சுயநிர்ணயத்துக்கான கோரிக்கையை முன்னிறுத்திப் போராடிய முறை தவறு என ஒரு சிங்கள முற்போக்காளர் சொல்வதற்கு சகலவிதப் பாத்தியதையும் உடையவர். சுயநிர்ணயக் கோரிக்கையையே நிராகரிக்கிற நிலையில், எவ்வளவுதான் முற்போக்கு உணர்வுள்ளவராயினும் இத்தகைய விமர்சனத்தை முன்வைக்க அருகதை அற்றவரே.
இந்தப்படம் அத்தகைய நிலையிலிருந்தே விடயங்களை அணுகுவதாகப் படுகிறது. முன்னாள் புலி உறுப்பினன் புது வாழ்வைத் தொடங்க முயல்கையில் சொந்தச் சமூகத்தவராலும், சட்டவிரோதமாக முன்னேறத்துடிக்கும் தமிழ்ச் சுரண்டலாளர்களாலும் தவறான வாழ்வுக்கு தள்ளப்படுவதைக் காட்டும் அதேவேளை, அவையெல்லாம் தவறு என்பதைவிடவும் அவற்றோடு முட்டிமோதிக் கபடங்களை ஒழித்துக் கட்டி மனிதர்கள் தமக்கான வாழ்வாதாரங்களைக் கண்டடைய வழிப்படுத்த முயலும் ஒருபடைப்பாக்கம் இது இந்த நோக்கம் குறை கூற இயலாததோடு, படைப்பாளியின் நோக்கம் முற்போக்குணர்வில் பாதக மற்றது என உணர்த்துவது; புனிதமான நோக்கமாயினும் பாதகமான விளைவைத் தரும்போது கண்டன விமர்சனம் தவிர்க்க இயலாததே.
ஆபத்தற்ற, நல்ல ஒரு வாழ்வை நாடுகிறவனுக்கு, நிறையவே கொடூரங்களையும் ஒடுக்குதலையும் சந்தித்த பெண் அடிக்கடி சொல்வாள் “இப்படித்தான் வாழ்க்கை, வாழ வேண்டும், அதற்காக எதையும் செய்யலாம்”. தமிழ்க் காமுகர்களால்(இதைச் சொல்வது அவசியம் – படைப்பாளி அழுத்த விரும்புவது இதனை; பேரின வாதத்தை மட்டுமன்றி, எம்மத்தியிலுள்ள இந்தக் கபடர்களையும் காண வேண்டும் எனக் கோருவதில் தவறில்லை. பிரச்சனை, கதைக் களத்தில் இராணுவ ஒடுக்குமுறை இன்னமும் நிதர்சனத்தில் உள்ளமை குறியீடாகவேனும் உணர்த்தப்படவில்லை.
தணிக்கைக்கு முகங்கொடுக்கும் உத்தி படைப்பாளி அறியாததல்ல. உடல் உபாதையின் உச்சத்தையும் கண்டநிலையிலும், அடுத்த நகர்வுக்கான நம்பிக்கை கெட்டிருக்கும் நிலையில் அவன் “இனி என்ன செய்வது” எனும்போது, அவள் சொல்வாள் “சாகவில்லையல்லவா, வாழ வேண்டும்” என்று. அவள் தனது வீட்டை அடைகிறாள்; அவளை அங்கு விட்டவன் தனது பயணத்தைத் தொடரும்போது, அவள் வீட்டினுள் நுழைவதைக்காட்டிய கமரா வீட்டுக் கூரைமேலே காட்சியை நகர்த்தித் தூரத்துப் பனைகளைக் காட்டும் நிலையில் கதையை முடிவுக்குக் கொண்டுவரும். இனி அவன் எப்படி வாழப் போகிறான்? பாதுகாப்பாக வாழ இயலாத நெருக்கடி இன்று பாதுகாப்பாக வாழ்கிற எல்லாராலும் உருவாக்கப்பட்டது தானே? “உங்களுக்கு நாடு பிடிக்க துவக்கு ஏந்தினன்.
முடியேல்லை, புதிசாய் வாழ நினைக்கிறன். வாழ விடுங்கோ” என்று முன்னதாக தன் சொந்த அயலிடம் கூறியிருந்தான். இப்போது, முன்னாள் போராளிகள் அனைவரும் முழுச் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டிருப்பது உணர்த்தப்படுகிறது. இதனை நாம் கவனம் கொள்வோமா?
ஆயினும், இந்த உணர்வை வந்தடைய இயலாமல் திரைக்கதை நகர்வு அமைந்துள்ளது. கதையைக் கட்டமைத்தவர்கள் முழுதாக அந்த மக்களிலிருந்து பிரிந்தவர்கள் என்பது பட்டவர்த்தனம். இயக்கத்திலிருந்து மகளைக் காக்க, முதலிரவிலேயே சாகும் படுகிளவனுக்கு எவரும் திருமணம் செய்து கொடுத்ததில்லை; வயதுக்கு வராத பொடி-பெட்டைக்கு கல்யாணம் செய்யப்பட்ட செய்தி இங்கே திரிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு முடித்து திரும்பும் முன்னாள் போராளிகளுக்கு சமூகத்தில் பல பிரச்சனைகள் உள்ளபோதிலும், இங்கே காட்டப்படுவதுபோல எல்லோரும் முழுதாகப் புறக்கணிப்பது என்பது அதீதமிகை! முன்னர் யாழ்க் கடற்கரையில் கள்ளக் கடத்தல் சாதாரண நிகழ்வு.
ஈழப் போராட்ட வடிவத்தைத் தவறாகத் திசைப்படுத்திய ஒரு அம்சத்தை வைத்து, இன்றைய முன்னாள் போராளி எதிர் நோக்கும் பிரச்சனையாக கள்ளக்கடத்தலைக் காட்டுவது முற்றிலும் பொருத்தமற்றது. இராணுவமும் கடற்படையும் முழத்துக்கு முழம் நிறைந்துள்ள இன்றைய யாழ் மண்ணில் இது முற்றிலும் சாத்தியமில்லை. “எங்கடை கையிலை துவக்கைத் தந்துபோட்டு, விழுகிற பிணத்தைக் காட்டி விசா எடுத்தவர்கள்” என நாயகனால் குற்றம் சாட்டப்படுகிறவர்கள், அவனது வாழ்வைப் பழைய பாணியில் தொடரவைத்து இன்னும் தமக்கான சொகுசு வாழ்வைத் தேடுகிற வழிகள் வேறாக இருக்க இவ்வாறு கள்ளக்கடத்தலைக் காட்டியிருக்க வேண்டியதில்லை. நடக்கிற அதே மாதிரிக் காட்ட வேண்டியதில்லை, இந்தப்போக்கு இருக்குதானே எனலாம்.
நிதர்சனத்தின் பல பக்கங்களைத் (தணிக்கையின் பயத்தால் என்றாலும்) தவிர்த்து, காட்டுவதையும் முற்றாகக் நடப்புக்கு மாறாக காட்டினால் எவர் தான் உங்கள் நேர்மையான நோக்கத்தைப் புரிய இயலும்?
கமரா ஊடாக வாழ்வைப் பேசும் நல்ல தமிழ்ச் சினிமாவைப் படைக்கும் ஒருவாய்ப்பு கைநழுவிப்போயுள்ளது. அந்த வழியில் பல சாதனைகளைச் செய்துள்ள சிங்களப் படைப்பாளிகள் நாமும் செய்ய உதவ இயலும் என்ற நம்பிக்கையை முழு அளவில் இப்படம் சிதைத்துள்ளது. இந்தத் தோல்வியை மறந்து மீழவே நீண்ட வருடங்கள் எடுக்கும். கலைக்கு அரசியல் வேண்டாம் என்கிறவர்கள் இந்தப் பாதகம் ஏற்பட்டதிலுள்ள அரசியல் பற்றியாவது விளங்க வேண்டும். தமிழ் மக்களது அரசியல் பற்றிய புரிதல் இல்லாமல் போனதின் கேடு இது!
சிறப்பான பதிவு- விமர்சனம். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
எனக்கு இந்த திரைப்படத்தை பார்க்க இன்னமும் நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த விமர்சனத்தில் அடங்கியுள்ள பின்வரும் வாக்கியத்தைப் பற்றி எனக்கு ஒரு கேள்வி எழுந்துள்ளது. “ஒடுக்கப்பட்ட இனம் தனது சுயநிர்ணயத்துக்கான கோரிக்கையை முன்னிறுத்திப் போராடிய முறை தவறு என ஒரு சிங்கள முற்போக்காளர் சொல்வதற்கு சகலவிதப் பாத்தியதையும் உடையவர். சுயநிர்ணயக் கோரிக்கையையே நிராகரிக்கிற நிலையில்இ எவ்வளவுதான் முற்போக்கு உணர்வுள்ளவராயினும் இத்தகைய விமர்சனத்தை முன்வைக்க அருகதை அற்றவரே.” அதாவது புலிகளின் பிரிவினைவாதத்தை –தனக்கென ஒரு குட்டி முதலாளித்துவ அரசை ஸ்தாபித்து தமிழ் தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் வேலைத் திட்டத்துக்காகஇ கொலைகார ஏகாதிபத்தியத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் முன்னோக்கை– முற்போக்கு உணர்வுள்ளவர்கள் விமர்சிக்கக் கூடாது என வலியுறுத்துவதாகவே இது அமையும். உண்மையில் இதை புலிகள் நடைமுறையில் கொலைகாரத்தனமாகவே வலியுறுத்தினர். அவர்கள் தமது அரசியல் எதிரிகளைக் கொன்றதோடு தமது கட்டுப்பாட்டில் மட்டுமன்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கூட வேறு அமைப்புகளுக்கு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஜனநாயக உரிமையை இராணுவச் சப்பாத்தைக் கொண்டு மிதித்தனர். சுயநிர்ணயக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத ஒருவருக்குஇ அந்தக் கோரிக்கையின் குறைபாடுகளை விமர்சிக்கவும்இ அந்தக் கோரிக்கைக்காக போராடியவர்களுக்கு நேர்ந்த கதியையும்இ அவர்களின் பிற்போக்கு செயற்பாடுகளையும்இ அவர்களால் அப்பாவி மக்களுக்கு நேர்ந்தவற்றையும் பற்றி விமர்சித்து தன்னுடைய நிலைப்பாடு சரியென நிரூபிக்க உரிமை உண்டு என்பதை இந்த விமர்சகர் புரிந்துகொள்ள வேண்டும். இதற்காக வி.ஐ. லெனின் பிழை என்று சொல்லவில்லை. லெனின் இந்தக் கோரிக்கையை அன்று பயன்படுத்தியிருந்தாலும்இ எதிர்காலத்தில் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்காக குட்டி முதலாளித்துவம் இந்தக் கோரிக்கையை பயன்படுத்திக்கொள்ளும் என அன்று ரோசா லக்ஸ்ம்பேர்க் எச்சரித்திருந்தது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று லிபியா கைப்பற்றப்பட்ட பின்னர் எண்ணெய் வளம் மிக்க பெங்காஸி பிரதேசத்திற்கு சுயநிர்ணய உரிமை பெறுவதைப் பற்றி அங்குள்ள குட்டி முதலாளித்துவ தட்டு யோசித்துக்கொண்டிருக்கின்றது. இதற்காக அவர்கள் ஒபாமாவுக்கு சேவை செய்யக் காத்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் அங்கு யாராவது சுயநிர்ணயக் கோரிக்கை நிராகரித்தால் அவர்களைப் போட்டுத்தள்ளவும் கூடும்.