மன்னாரில் கடந்த வியாழக்கிழமை வெள்ளை வானில் துப்பாக்கிகளுடன் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பெண் ஒருவர் உட்பட்ட ஐந்து பேர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மன்னார் கொண்டு வரப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டு உள்ளார்கள்.
யாழ். உரும்பிராயில் சின்னத்துரை குகதாஸன் வெள்ளிக்கிழமை முதல் காணமல் போயுள்ளதாக அவருடை மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். உரும்பிராய்ச் சந்தியில் செருப்புத் தைத்து வாழ்ந்து வந்த குகதாஸன் விறகு வாங்கச் சென்ற போது காணமல் போயுள்ளார். ஏற்கனவே உரும்பிராயில் இடம் பெற்ற கொலை, கடத்தல் சம்பவங்களால் அச்சமடைந்துள்ள மக்களை இச்சம்பவம் மேலும் அச்சமடையச் செய்துள்ளது.