முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரழிவு நிகழ்த்தப்பட்டு இன்று மூன்று ஆண்டுகள். உலகமே கைகட்டி அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று உலக மனிதக் கூட்டத்தின் ஒரு பகுதி ஒரு சிறிய மூலைத் துண்டுக்குள் துவம்சம் செய்யப்பட்டது.
பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம். செத்துப் போன அன்னையின் மடியில் பசியோடு கதறியழுத பிறந்த குழந்தைகளைக் கண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் மனிதக் கசாப்புகடையாக மாற்றப்பட்டது. மரணித்துப் போன அந்த மனிதர்களின் அவலக் குரல் இன்னும் காற்றலைகளோடு ‘ஓ’ வென்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரத்தமும் சதையுமாக இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலம் நிகழ்த்தி முடிக்கப்பட்டது.
இலங்கைப் பேரினவாதம் அறுபது ஆண்டுகள் சிறுகச் சிறுக நிழக்த்திய அழிப்பை அதே வக்கிரத்தோடு உலக அதிகாரவர்க்கத்தின் ஆசியோடு வன்னி நிலத்தின் மூலைக்குள் நிகழ்த்தி முடித்துவிட்டு உலகின் ஒவ்வோர் மூலையிலும் குருதியால் அறைந்து நியாயம் சொல்கிறார்கள். நாங்கள் பயங்கரவாத்தை அழித்துவிட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி வலம் வருகிறார்கள்.
என்ன குறை எமக்கு? வானமும் வையகமும் என்றைக்கும் இளமைபொங்கும் காதலோடு வழம்கொழிக்கும் நாடு அது. வன்னி மக்கள் அன்னியர்களை என்றுமே எதிர்பார்த்ததில்லை. மனிதச் சதைகளால் அந்த மண்ணை உரமாக்கிய கொடிய மனித மிருகங்கள் அன்னியர்களை அங்கே அழைத்துச் சென்று ஆரவரம் செய்கிறார்கள். சமாதானம் செய்யப்பட்டதாக சவக் கிடங்களுக்கு மேல் கூட்டம் போட்டுப் பேசிக்கொள்கிறார்கள்.
மனிதர்களை அழித்துப்போட்ட மிருகங்களின் தலைவன் இந்திய அதிகாரவர்கத்தால் கௌரவப்படுத்தப்பட, குண்டுகளையும் சன்னங்களையும் உடலில் சுமந்த குழந்தைகள் கூட்டம் எரியும் உணர்வுகளோடு மெல்லத் துளிர்விடுகிறது.
நோர்வேயிலிருந்து சமாதானம் என்று கைகோர்த்துக் கொண்ட மனிதர்கள் உரிமை கிடையாது என்று கூட்டம் போட்டுக் கூக்குரலிட உடல் ஊனமாக்கப்பட்ட சமூகம் வீரம் மிக்க உணர்வுகளோடு பார்த்துகொண்டிருக்கிறது.
அழிக்கப்பட்ட போது மூடிய கண்களோடு மேற்கின் அசுத்தக் காற்றை அமைதியாகச் சுவாசித்துக் கொண்டிருந்த அமரிக்க அடியாள் ஐக்கிய நாடுகள் சபையை அருவருப்போடு அவதானித்துக்கொண்டே முள்ளிவாய்க்காலில் பிரசவித்த தாய் தாலாட்டுப் பாடுகிறாள்.
இவர்களை எல்லாம் இன்னும் நம்புங்கள் என்று புலம்பும் புலம் பெயர் வியாபரக் கூட்டத்தின் மில்லியன்களை துப்பாக்கியோடு தெருவிற்கு வந்த வீரம் செறிந்த போராளிகள் பார்க்கிறார்கள்.
எனது தேசத்தின் தலைவிதி இதுவோ என்று மௌனமாய் அழும் முதியவர்களை உலகின் ஒவ்வோரு மூலையிலும் ஒடுக்கப்பட்டவர்கள் திருபிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
யுத்தத வெற்றிக் கொண்டாட்டங்களில் வெற்றிக் களிப்பில் வழங்கப்படுவது பால் சோறல்ல, இரத்தச் சோறு என சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள்.
ஓநாய்கள் எஞ்சியவர்கள் இரத்தம் குடிப்பதற்காக அதிகார நலன்களோடு காத்திருக்கின்றன. போர் விமானங்களுக்குப் பதிலாக வியாபரப் பருந்துகள் வன்னியையும் கடந்து வட்டமிடுகின்றன.பொய்யர்களும், திருடர்களும், போக்கிரிகளும், அடையாளத்திற்காகவும், தலைமை வெறிக்காகவும், பணச் சுருட்டல்களுக்காகவும் அழிவுகளின் ஆன்மாவில் அறைந்து அரசியல் போசிகிறார்கள்.
யுத்தத முனையில் துப்பாக்கியோடு கொல்லப்பட்ட, கொன்று போடப்பட்ட ஆயிரமாயிரம் போராளிகளின் தியாகங்களும் இணைந்தே முள்ளிவாய்க்காலின் அவலக் குரல் ஒலிக்கிறது. அதனைப் புதிய சமூகத்தின் விடுதலைக் கீதமாக்குவோம்.