ரொய்ட்டர் செய்திச்சேவை கிளிநொச்சியில் சேகரித்த தகவல்களின் படி, இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் போரின் போது முகங்கொடுத்த கோரங்களில் இருந்து மக்கள் இன்னும் மீளத் திரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ரஞ்சனி என்ற பெயரைக் கொண்ட பெண் ஒருவர், போரின் போது தனது தாயின் சடலம் எரியுண்டதையும், தமது சகோதரி இரத்தம் தோய்ந்த நிலையில் வீழ்ந்து கிடந்ததையும், உறவினர்கள் கண்முன்னே கொல்லப்பட்டதையும் நினைவுகூரு வதை ரொய்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தனை சம்பங்களையும் நேரில் கண்ட தானும் இறந்திருக்க வேண்டும் என்று ரஞ்சனி கூறிய கருத்தை ரொய்ட்டர் கிளிநொச்சி மக்களின் எதிர்கால வாழ்வின் சந்தேகத்துக்கு உதாரணமாகக் காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நிதியின் கீழ் கிளிநொச்சியில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர் ஒருவர், இலங்கை அரசு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்ற போதும் மக்கள் வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்களும், துர்நடத்தைகளும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சிலர் தம் மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக விலை குறைந்த மதுபானங்களை வாங்கி வீதியோரங்களில் வைத்தே அருந்துகின்றனர் என்றும் ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிலர் தமது மன அழுத்தங்களுக்காக ஆலோசனை பெற்றுக்கொள்கின்றனர்.கிளிநொச்சி அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன், உளவியல் மனோதத்துவ நிபுணர்கள் உரிய எண்ணிக்கையில் இருந்தால் தமது மாவட்டத்தில் மன அழுத்தம் ஒரு பிரச்சினையாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் ஒரு லட் சத்து 20 ஆயிரம் பேருக்கு ஒரேயொரு மனோதத்துவ நிபுணர் மாத்திரமே பணியில் இருப் பதையும் றூபவதி கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.