10.02.2008.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக எவரும் பேசுவார்களெனில் அது, வெறும் “குப்பையே’ என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அத்துடன், அப்படி எவரும் பேசுவாரெனில் பேசுபவருக்கு இனப்படுகொலை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதென்றே அர்த்தமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு வளிமண்டளவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று, திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சமரசிங்க இவ்வாறு கூறினார்.
“இன ஒழிப்பு பற்றி பேசுவதென்றால் விடுதலைப் புலிகளுக்குத்தான் அதைக் கூற வேண்டும். ஏனெனில், அவர்கள் தான் வடக்கு, கிழக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வாழ இடமளிக்கவில்லை. எம்மை பொறுத்தவரை இது இலங்கை வாழ் அனைத்து இனத்தவர்களுக்குமான நாடு’ என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்த எவரும் மீண்டும் அரச கட்டுபாடற்ற பகுதிக்கே செல்ல வேண்டுமென்றால் அவர்களது விருப்பத்துடன் அரசாங்கத்தால் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அமைச்சர் சமரசிங்க இதன்போது மேலும் கூறினார்.
இதேநேரம், படையினருக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் பிரகாரம் வன்னியில் எஞ்சியிருக்கும் அரச கட்டுபாடற்ற பிரதேசத்தினுள் நன்கு பயிற்சி பெற்ற 700 புலி உறுப்பினர்களும், சுமார் ஒரு இலட்சம் பொது மக்களுமே இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறினார்.