இதே நாளில்தான் தொழுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்த அருட்தந்தை கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் இரண்டு குழந்தைகளோடு உயிரோடு கொளுத்தப்பட்ட நாள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கி மத்திய அமைச்சர்.
நேரடியாகவும் துல்லியமாகவும் இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், மிக முக்கியமாக ஒரு நாட்டின் சிவில் அமைப்புகளும், நீதித்துறையும் சிறுபான்மை மக்கள் தொடர்பான வழக்குகளில் நடந்து கொள்ளும் விதங்களையும் பார்க்கும் போது இந்தியாவில் இனப்படுகொலைக்கான புறச்சூழல் உருவாகியிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
இது அரசியல் ரீதியாக வலுப்பெற இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாமல் இருப்பது ஒரு முக்கியக் காரணம். காங்கிரஸ், சமாஜ்வாதி,திரிணாமூல்,இடதுசாரிகள் என அனைத்துக் கட்சிகளும் ஓரணியும் திரளாமல் தனித்து நிற்பது மீண்டும் மோடியின் ஆட்சிக்கே வழிவகுக்கும். இது உறுதி ஆனால் இதன் நேரடி பாதிப்பை சிறுபான்மை மக்களே அனுபவிக்கப் போகிறார்கள்.
பாஜகவுக்கென்று இந்திய அரசியலில் கட்டமைப்போ, மக்கள் செல்வாக்கோ கிடையாது. அது காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை உடைத்து தனது பாஜக என்ற கட்சியை உருவாக்குகிறது. வாக்காளர்களை பிளவு படுத்துவதன் மூலம் இந்து வாக்கு வங்கியை உருவாக்கி பிறரை விட தான் வலிமையான கட்சி என்பதை நிறுவிக் கொள்கிறது.
ஆனால், இந்தச் சூழலுக்கு காங்கிரஸ் கட்சி பலவீனமாகிப் போனது அது மீண்டெழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாமையுமே காரணம். இந்நிலையில்தான் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் இந்திய அளவில் பாஜகவுக்கு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று திருமாவளவன் தொடர்ந்து கூறி வரும் கருத்து கவனிக்கத்தக்கது.