இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க இராணுவ நடவடிக்கைகளும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தீவிரமடைந்துவரும் நிலையில், அப்பிரச்சனையில் தி.மு.க.வின் நிலை குறித்து விளக்க சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.கருணாநிதி, தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்குமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலுயுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இலங்கைத் தமிழர்களைக் காக்கக்கோரி பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தான் எழுதிய கடிதத்திற்கு பயனில்லாமல் போகவில்லை என்று கூறிய கருணாநிதி, தன்னிடம் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமரிடம் இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை தான் அவருக்கு எடுத்துரைத்ததாகக் கூறினார்.
“எப்படியெல்லாம் தமிழர்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவின் தலையீடு இருந்தும்கூட, அப்படி இருந்ததாகவே அவர்கள் எண்ணவில்லை. அதை அலட்சியப்படுத்திவிட்டு நடக்கிறார்கள். தினம் தினம் எங்கள் செவிகளில் விழுகின்ற செய்திகள் எங்களை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. எங்களால் தமிழகத்தில் தொடர்ந்து இனி வாழ முடியுமா? என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாள்தோறும் செத்துக்கொண்டிருக்கிறோம் என்று மன்மோகன் சிங்கிடம் சொன்னேன். அவர்கள் கவலைப்படவேண்டாம், நான் உறுதியாகச் சொல்கிறேன், என்னை நம்புங்கள் என்று இந்தியப் பிரதமர் எனக்கு வாக்களித்தார். வாக்கிளித்த உடனேதான் நான் அவரிடம் எங்களுடைய கோரிக்கைகளை நீங்கள் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று சொன்னேன். என்ன கோரிக்கைகள் என்று கேட்டார். ஒவ்வொரு கோரிக்கையாக அவருக்குப் படித்துக் காட்டினேன்” என்று கூறிய கருணாநிதி தான் முன்வைத்த கோரிக்கைகளை படித்துக்காட்டினார்.