அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸ் ஐநா எமது நாட்டின் உள் விவாகரங்களில் தலையிடக் கூடாது என்று கோரியிருக்கிறார். புலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இதன் மீது நம்பகத்தன்மையில்லாமல் ஐ.நா. விசாரிக்க முயல்வது நல்லதல்ல என்று பெரிஸ் கூறினார்.
இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் குழுவை ஐ.நா. அமைப்பதென்பது சட்டரீதியாகவும், தார்மிக ரீதியாகவும் நியாயமானதல்ல. இதனால் இலங்கை மக்கள் மத்தியில் அதிருப்திதான் ஏற்படும். புலிகளுடனான போரினால் 30 ஆண்டுகளாக வளர்ச்சி பாதிக்கப்பட்ட இலங்கை, அதில் இருந்து மீண்டு தற்போதுதான் லேசாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கை மீதான விசாரணை என்ற ஐ.நா.வின் நடவடிக்கை நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பெரிஸ் கூறியுள்ளார். ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை விரைவில் சந்தித்துப் பேசவுள்ளார் பெரிஸ். பான் கீ மூனை சந்திக்கும் போது இலங்கை உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தான் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை அரசு விசாரணை நடத்தவுள்ள நிலையில் ஐ.நா. தலையிடுவது விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் பான் கீ மூனிடம் தான் எடுத்துச் சொல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் பயங்கரவாத இலங்கை அரசின் போர்க்குற்ற ஆவணங்கள் வெளிப்பட்டு வந்தும் ஏகாதிபத்திய நாடுகளோ தன்னார்வக்குழுக்களோ ஐநாவோ ஒப்புக்கு சில வார்த்தைகளைக் கூறுகின்றனவே தவிர இலங்கை மீதான போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் ஐநாவுக்கு பெரீஸ் இந்த பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.