09.10.2008.
“சிங்கள நாட்டை சிங்கள நாடு என்று சொல்லாமல் அவுஸ்திரேலியா என்றா சொல்ல முடியுமென கேள்வியெழுப்பிய ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர், இந்த நாடு சிங்களவர்களுக்கே உரியது என்றும் வலியுறுத்திக் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இந்த நாடு தொடர்பாகவும் நாட்டு மக்கள் தொடர்பாகவும் இராணுவத் தளபதி கூறிய கருத்துகள் சரியானவையே. சிங்கள நாட்டை சிங்கள நாடெனக் கூறாது அவுஸ்திரேலியா அல்லது இந்தியாவென்றா கூறமுடியும் ?’
நாம் வெளிநாடுகளுக்கு சென்றால் கூட எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால் சிங்கள நாட்டிலிருந்து வருகின்றோம் அல்லது இலங்கையிலிருந்து வருகின்றோம் என்றுதான் நாம் கூறுவோம். ஏனெனில், இந்த நாடு சிங்களவர்கள் வாழும் நாடு.
முற்காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தமிழர்கள் வந்ததாக கூறப்படுவது தவறு. வந்தவர்களில் தலைவர்கள் எல்லாம் சிங்களவர்கள். அவர்களுடன் வந்தவர்களில் சிலர் தமிழர்களாக இருக்கலாம். அதற்காக இது தமிழரின் நாடாகிவிட முடியாது. இது சிங்களவர்களின் நாடு.