இந்தியாவில் இந்து தேசியவாதம் எழுச்சி பெற்று வருவதன் பிரதிபலிப்பு பல தளங்களிலும் பிரதிபலிக்கிறது. நீதித்துறை, சிவில் நிர்வாகம் அனைத்தும் இந்து மயமாகி வரும் சூழலில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஷியா பிரிவு வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி முஸ்லீம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.
வசீம் ரிஸ்வி பாஜக ஆதரவாளர் தொடர்ச்சியாக இஸ்லாம் மதம் குறித்தும் முஸ்லீம்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவர் முகம்மது நபி குறித்து எழுதிய நூல் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது.
இவர் நேற்று திங்கள்கிழமை இந்து மதத்தைத் தழுவினார். காசியாபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோயிலில் இந்து மதத்தைத் தழுவிய அவர், தன் பெயரை ஜிதேந்திர நாராயன் சிங் தியாகி என மாற்றிக்கொண்டார். கோவில் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்த பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அவர் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக பேசிய அவர், “உலகின் சனாதன தர்ம மதமே சிறந்தது. டிசம்பர் 6 அன்று நான் இந்து மதத்திற்கு மாறியுள்ளேன். இந்த நாள் இந்து மதத்திற்கும் இந்துத்துவாவுக்கும் பெருமையான நாள். ராமர் பிறந்த இடத்தில் அவரை அவமதிக்கும் படி கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்த நாள் பொன்னான நாள் அதில் நான் சனாதன இந்து மதத்திற்கு மாறியுள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.
சனாதனதர்மம் மனித குலத்திற்கே எதிரானது அது பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே எதிரானது என அதை தீயிட்டுக் கொளுத்தினார் அம்பேத்கர். ஒருவர் இந்து மதத்திற்கு மாறும் போது அவர் ஏதேனும் ஒரு சாதியை தழுவிக் கொள்ள வேண்டும். அதுதான் சனாதன தர்மம். முஸ்லீமாக இருந்து இந்துவாக மாறியுள்ள வசீம் ரிஸ்வியை எந்த சாதியின் சனாதனிகள் சேர்ப்பார்கள் என தெரியவில்லை.