இந்துக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்பினர் எவற்றைச் செய்தாலும், அவை பெரும்பான்மை இந்து மக்களின் நலன்களுக்குக் கேடாகவே இருக்கின்றன. கர்நாடக மாநிலம் பசவனகுடியில் (Basavanagudi) 8.2.2015 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு பெருங்கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இவ்வமைப்பின் தலைவரான பிரவீண் தொகடியாவுக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்தது.
இதைப் பற்றி ஹோசூரில் 7.2.2015 அன்று பத்திரிக்கையளரிடம் பேசிய தொகாடியா, கர்நாடக மாநில அரசு இந்து மக்களுக்கு எதிராக நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டினார். அதன் பின் இந்து மக்களின் ஒற்றுமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், அவரது திட்டங்களை விளக்கிப் பேசினார்.
“கோவிலின் கருவறையில் தாழத்தப்பட்ட வகுப்பு மக்கள் அனுமதிக்கப்படுவார்களா?” என்று பத்திரிக்கையாளர்கள் வினவியதற்கு, கோவிலில் தான் அனுமதிக்கப்படும் இடம் வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களும் அனுமதிக்ப்படுவார்கள் என்று விடை அளித்தார்.
மேலும் ஆறு இலட்சம் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களையும் உள்ளிட்டு அனைத்து வகுப்பு மக்களும் ஒன்றாக அமர்ந்து சமபந்தி விருந்து உண்ணும் நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் அனைத்து வகுப்பு மக்களும் ஒரே கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், அனைத்து வகுப்பு மக்களும் ஒரே மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் .கூறினார். மேலும் உணவு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம், பாதுகாப்பு ஆகிய ஆறு முனைகளில் அனைத்து இந்து மக்களும் “ஒற்றுமையாக” வாழ வழிவகைகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
“எட்டுத் தட்டு லட்டு தந்தால் பிட்டுப் பிட்டுத் தின்பேனடா; புலிக்குப் பயந்த பேர்கள் எல்லாம் என் மேலே வந்து விழுங்கடா” என்று ஒருவன் வீராவேசமாக முழங்கினானாம். அவனுக்கு ஒரு லட்டைக் கடித்துச் சாப்பிடக் கூட பல்லில் வலிமை இல்லை; அதை உடைத்துத் தான் சாப்பிட முடியும் என்ற வலுவின்மையையும், புலிக்குப் பயந்தவர்கள் அனைவரும் தன் மீது விழுந்து விட்டால், தான் அடியில் இருக்க, மேலே இருப்பவர்களைப் புலி அடித்துச் சாப்பிட்டு விட்டு ஓடி விடும்; தான் தப்பித்து விடலாம் என்ற கோழைத்தனத்தையும் தான் அவன் வீராவேசமாக முழங்கினான்.
அது போலவே பிரவீண் தொகாடியாவும் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு எதிரான கருத்தை, ஏதோ அவர்களுடைய நலன்களுக்கானவை என்பது போல் கூறி இருக்கிறார்.
கோவில் கருவறை வரை நுழைவதற்கு உரிமை என்று சொன்னால், அனைத்து வகுப்பு மக்களும் அர்ச்சகராக வர முடிய வேண்டும்; இதை ஒப்புக் கொள்ளாத விதிமுறைகள் ஆணி வேர் சல்லி வேரோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்று தான் பொருள். ஆனால் இதைப் பற்றி அவர் கண்டு கொள்ளவே மறுக்கிறார்.
அடுத்து, சமபந்தி விருந்து ஆறு இலட்சம் கிராமங்களில் நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார். சமபந்தி விருந்து என்பது சாதி ஏற்றத் தாழ்வு மறுப்பின் ஒரு சாதாரண வெளிப்பாடே தவிர, அது ஒரு தீர்வே அல்ல. இதனால் சாதிக் கொடுமைகள் எள் முனை அளவும் ஒழிந்து விடாது. சம பந்தி விருந்து எனும் கருத்தியலே தேவைப்படாத நிலையை உருவாக்குவது பற்றி அல்லவா பேச வேண்டும்?
அடுத்து, இந்து மதத்தின் அனைத்து வகுப்பு மக்களும் “ஒற்றுமையாக” வாழ உணவு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம், பாதுகாப்பு ஆகிய ஆறு முனைகளில் செயல்படப் போவதாகக் கூறியதைப் பார்ப்போம்.
இது வரைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் உணவு கிடைக்காமலா இருந்தார்கள்? உண்மையான பிரச்சினை என்னவென்றால் உயர் சாதிக் கும்பலினர் உயர் தர உணவை அடைய முடிவதும், ஒடுக்கப்பட்ட மக்கள் தரம் குறைந்த உணவையே உண்ண நேர்வதும் தானே? இந்நிலைமை மாறுவதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் கொண்ட, உயர் வருவாயை அளிக்கும் வேலைகளை அடைந்தால் அல்லவா முடியும்? இதை எப்படி அடைவது என்பது பற்றி அவர் பேசவே இல்லையே?
அடுத்தது சுகாதாரம். இந்தியாவில் சுகாதாரம் படும் இலட்சணம் ஒன்றும் பிரம்ம இரகசியம் அல்ல. ஒரு மனிதனின் நோய்க்குத் தகுந்தாற் போல் சிகிச்சை அளிக்காமல் அவனிடம் உள்ள பணத்தைப் பொறுத்துச் சிகிச்சை அளிக்கும் அவலத்தை, கடைந்து எடுத்த அறிவிலிகளாலும் அறிந்து கொள்ள முடியுமே? மருத்துவ மனைகளில் ஒருவருடைய நோயைப் பற்றிய விவரங்களை விட, அவரால் எவ்வளவு செலவழிக்க முடியும் என்ற விவரங்களை அல்லவா ஆர்வமுடன் சேகரிக்கிறார்கள்? இந்தியாவில் பணம் பதுங்கி இருப்பது உயர் சாதிக் கும்பலிடம் தான் என்பதைத் தொகாடியா அறிய மாட்டாரா? அப்படி இருக்கையில், இந்நிலையை மாற்றாமல்
அனைத்து வகுப்பு மக்களுக்கும் நியாயமான முறையில் சுகாதாரத்தை எப்படி அளிக்க முடியும்?
அடுத்து, கல்வியும் வேலை வாய்ப்பும். இந்தியாவில் உயர் சாதிக் கும்பலினர் ஆட்சி அதிகாரக் கல்வியிலும், ஆட்சி அதிகார வேலைகளிலும் கொடூரமான அளவில் வாய்ப்பு பெறுவதும், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், அனைத்து மக்களுக்கும் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்குமான கல்வியை மட்டுமே பெற வேண்டும் என்றும் அவ்வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் கட்டாயப் படுத்தப்படுவது பிரம்ம இரகசியம் அல்ல. மனு அநீதிக் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இந்நிலை தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலைமையைத் தலை கீழாக மாற்றினால் தானே பெரும்பான்மையான இந்து மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படும்? ஆனால் தொகாடியா இதைப் பற்றி ஒரு வார்த்தையையும் சொல்லவில்லையே?
அடுத்து வணிகம் பற்றியது. இதிலும் நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்தும் பெரு வணிகங்கள் எல்லாம் உயர் சாதிக் கும்பலினரின் கைகளில் அல்லவா உள்ளன? ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் கைகளில், சொன்னதைக் கேட்டுக் கட்டுப்பட்டு நடத்த வேண்டிய சிறு வணிகங்கள் மட்டுமே அல்லவா உள்ளன? இந்நிலைமை மாற என்ன செய்ய வேண்டும் என்று அவர் ஒரு வார்த்தையையும் பேசவில்லையே?
இறுதியாக, பாதுகாப்பு பற்றி அவர் பேசி இருக்கிறார். நாட்டில் கலவரங்கள் நடக்கும் போது மட்டும் அல்ல; சாதாரண காலங்களிலும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களே. அவர்களுடைய பாதுகாப்பின்மை பற்றிய புகார்கள், காவல் துறை உட்பட எந்த அரசுத் துறை அலுவலகங்களிலும் பதியப்படுவது இல்லை. கடுமையான போராட்டங்கள் நடத்திப் பதிய வைத்தாலும் அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை.
காரணம் அங்கெல்லாம் உயர் சாதிக் கும்பலினர் ஆதிக்க நிலைகளில் ஆக்கிரமித்து இருப்பதும், அடுத்த நிலைகளில் உயர்சாதிக் கும்பலினரிடம் விலை போகிறவர்களுக்கு மட்டுமே இடம் கிடைப்பதும் தான். அவ்விடங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் சரியான எண்ணிக்கையில் இருந்தால், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைத் தாக்கும் காலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேற்கொண்டு செயல்பட விடாமல் தடுத்து விட முடியும் அல்லவா? ஆனால் இதைச் செய்ய வேண்டும் என்று ஊகமாகக் கூட ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை.
இப்படி இருக்கும் போது இந்துக்களில் உள்ள பெரும்பான்மை மக்களின் நலன்களை இவர்களால் எப்படி முன்னெடுக்க முடியும்?
இந்துக்களில் மிக மிக …. மிகப் பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! திறமையானவர்களும், திறமைக் குறைவானவர்களும் அனைத்து வகுப்பு மக்களிடமும் இருக்கையில், உயர் நிலைகளில் உயர் சாதிக் கும்பலினரையும், கீழ் நிலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களையும் தேர்ந்து எடுக்கும் பொதுப் போட்டி முறையை முற்றிலும் ஒழித்து விட்டு, அந்தந்த வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர் நிலை வேலைகளிலும் அந்தந்த வகுப்பில் உள்ள திறமைக் குறைவானர்கள் அடுத்த நிலை வேலைகளிலும் இருக்கும்படியாகச் செய்யும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்தி விட்டால் அதிகார மையங்களில் உயர் சாதிக் கும்பலினரின் ஆதிக்கம் வலுவிழந்து விடும் அல்லவா? அப்பொழுது தொகாடியா குறிப்பிட்ட ஆறு முனைகளிலும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த இந்துக்களும் சம உரிமை அடைய முடியும் அல்லவா?
ஆகவே இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலை வேலைகளிலும் அவரவர் மக்கள் தொகை விகிதத்தில் இருக்கும்படியாக விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல் படுத்த வேண்டும் என்று போராடலாமே?
இக்கோரிக்கையை இந்தியாவின் தலைசிறந்த தேசபக்தரும், தலைசிறந்த இந்து மதாபிமானியுமான வ.உ.சி. 5.11.1927 அன்று சேலம் நகரில் ‘எனது அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பில் முன் வைத்து இருக்கிறார் என்பதையும், இதைப் பார்ப்பனர்கள் இருட்டடிப்பு செய்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
இந்துக்களே! விழித்து எழுங்கள்; ஒன்று படுங்கள்; இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்படவும், அவ் ஒற்றுமை குலையாது இருக்கவும், அவர்களுக்கு உரிய நலன்கள் அனைத்தும் கிடைக்கவும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை வென்றெடுங்கள். அது வரை ஓய வேண்டாம். ‘எழுமின்! விழிமின்! இறுதி இலக்கு அடையும் வரை ஓய வ்ண்டாம்’ என்று விவேகானந்தர் கூறியபடி, அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் விகிதாச்சாரப் பங்கீடு கிடைக்கும் வரை ஓய வேண்டாம்
இராமியா
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.2..2015 இதழில் வெளி வந்துள்ளது)
முஸ்லீம்கள் ஒன்று சேரனும்ன்னு சொல்லுற முஸ்லீம் தீவிரவாதிகளும்தான் முஸ்லீகளை கொல்லுறானுங்க…………..
இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?