முள்ளிவாய்க்கால் யுத்தத்தால் முற்றாக அழிக்கப்பட்ட கிராமம். யுத்தகாலத்துக்கு முன்னர் 550 குடும்பங்கள் வாழ்ந்த வெள்ளா முள்ளிவாய்க்கால் கிராமத்தில் தற்போது 350 குடும்பங்களே மீள் குடியேறியுள்ளன. இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 80 வீடுகள் UNHABITAT நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதைவிட 50 வீடுகள் கரித்தாஸ்‚ போரூட் நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தில் 107 வீடுகள் கட்டிக் கொடுக்கவென புள்ளியடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்ட்டு பெயர்ப்பட்டியலும் கிராம அலுவலரால் பார்வைக்கு ஒட்டப்பட்டிருந்தது. இந்திய வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப் பட்டிருந்ததால் இந்த 107 பயனாளிகளுக்கும் ஏனைய நிறுவனங்கள் வீடு கட்டிக் கொடுக்கவும் உதவுவதற்கும் முன்வர வில்லை.
இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட மக்கள் கடந்த 27.4.2015 அன்று ஊர்வலமாச் சென்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் மகஜரினைக் கையளித்தனர். தமக்கென்று ஒதுக்கப்பட்ட 107 வீடுகளும் மாயமாய் மறைந்த மர்மம் என்ன? என்று கேட்கிறார்கள் நாதியற்றுப் போன தமிழர்கள்.
உலகமே முள்ளிவாய்க்காலுக்கென்று அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்கிறது. ஆனால் முள்ளிவாய்க்கால் மக்களுக்கென ஓதுக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தை அரசாங்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் நீராவிப்பிட்டிக் கிராமத்திற்குத் திருப்பி விட்டதாக முள்ளிவாய்க்காலில் நாதியற்றுப் போன தமிழர்கள் முறையிடுகிறார்கள்.
நிலத்தைக் கிண்டி இரும்பு பொறுக்கி விற்று வாழ்க்கையை நாடத்துகின்றார்கள். பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. அண்மையில் இரட்டைவாய்க்கால் பாதையோரும் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இரட்டை வாய்க்கால் பாதையில் பெண்கள் தனியாகச் செல்ல முடியாது. போகும் வழியில் இராணுவ முகாம். பற்றைக்காடு. மனிதர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்!!!
முள்ளிவாய்க்கால் தேனும் பாலும் சொரிந்த கிராமம். பால் மாடு வளர்ப்பார்கள். வீட்டில் மிஞ்சும் பாலையும் தயிரையும் நிலத்திலே வெட்டித் தாள்ப்பார்கள். வீட்டிலே அரியதரம் பலகாரம் சுடுவதென்றால் தேன் விட்டுத்தான் சுடுவார்கள். கழி கிண்டுவதென்றால் தேனை விட்டுத்தான் செய்வார்கள். இன்று அந்தத் தேன் விளையும் காடெல்லாம் கடற்படைவசம். பால் மாடுகளும் இல்லை. மந்தையை மேய்க்கும் இடையனும் இல்லை. முள்ளிவாய்க்கால் ஒரு யுகத்தையே புரட்டிப் போட்டது.
– அருணன் நிமலேந்திரா
அம்ரித் பெர்னாண்டோ
பாதிக்கப்பட்ட மக்கள்: