ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே மாம்பழ இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்போது வெற்றிலை இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உழைப்பாளர் தினமான மே முதல் தேதியில் இருந்து அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு இறக்குமதி தடை விதித்திருந்தது ஐரோப்பா யூனியன்.தற்போது புதியதாக இந்திய வெற்றிலை இறக்குமதியையும் தடை செய்துள்ளது.
1995-இல் உருவாக்கப்பட்ட உலக வர்த்தகக் கழகம் (WTO), நாடுகளுக்கு இடையில் நடக்கும் ஏற்றுமதி-இறக்குமதியை நெறிமுறைப்படுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இதில் உறுப்பினராக உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளால் கையெழுத்திடப்பட்ட சட்டத்தைக் கொண்டு உலக வர்த்தகத்தை இக்கழகம் நெறிப்படுத்துகிறது. தற்போது 159 நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள இக்கழகம், உலகாளவிய விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதியைக் கட்டுப்படுத்த “விவசாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Agreement on Agriculture)” உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், உள்நாட்டுச் சந்தையைத் திறத்தல் , ஏற்றுமதிக்கான மானியத்தை ஒழுங்கமைத்தல், உற்பத்திக்கான உள்நாட்டு மானியத்தை வெட்டுவதைப் பற்றிய விதிகள், சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகள் (Sanitary and phyto sanitary regulations) மற்றும் நாடுகளுக்கிடையிலான வர்த்தகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஆகிய ஐந்து அம்சங்கள் அடங்கியுள்ளன.
இந்த ஒப்பந்தப்படி ஏகாதிபத்திய நாடுகள் தங்களது உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கப் போடப்பட்டிருக்கும் சுங்கவரியை 36 சதவீதமும், ஏழை நாடுகள் 24 சதவீதமும் குறைக்க வேண்டும். மேலும், சுங்க வரியைத் தவிர இதர வர்த்தகத் தடைகளும் நீக்கப்பட வேண்டும். ஏழை நாடுகள் -ஏகாதிபத்திய நாடுகள் என்ற பாரபட்சமின்றி ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் நாட்டில் 1986-88ல் கொடுக்கப்பட்ட மானியச் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்திக்கான உள்நாட்டு மானியம், ஏற்றுமதிக்காகக் கொடுப்படும் மானியம் முதலானவற்றையும் குறைக்க வேண்டும். இவற்றை 2000 மற்றும் 2004-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதே உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியுள்ள விதியாகும்.
இந்தியா போன்ற ஏழை நாடுகள் விவசாய பொருட்கள் உற்பத்திக்கோ அல்லது ஏற்றுமதிக்கோ 1986-88இல் கொடுத்த மானியம் என்பது மிகவும் குறைவு. ஆனால், ஏகாதிபத்திய நாடுகள் கொடுத்த மானியமோ மிகவும் அதிகம். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு ஆகும் செலவில் 90 சதவீதத்தை 1986-88 இல் ஜப்பானிய வல்லரசு விவசாயிகளுக்கு மானியமாகக் கொடுத்தது. மறுபுறம், தனது சந்தையைப் பாதுகாத்துக் கொள்ள ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெண்ணெய்க்கு 500 சதவீத அளவுக்கு சுங்க வரி விதித்தது. அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் முதலான ஏகாதிபத்திய நாடுகளிலும், கனடா, ஆஸ்திரேலியா முதலான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் ஏறத்தாழ இதே நிலைமைதான் இருந்தது.
உலக வர்த்தக கழக விதியின்படி, விவசாய மானியத்தைக் குறைக்கச் சொல்லி ஏழை நாடுகளை நிர்பந்தித்து வந்த அமெரிக்க அரசோ, தான் வழங்கும் மானியத்தில் சல்லிக்காசு கூடக் குறைக்கவில்லை. அமெரிக்காவில் 1996-2010க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாயத்திற்கான உள்நாட்டு மானியம் 61 லிருந்து 130 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு 2010-ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு வழங்கிய மானியம், 1995-ஆம் ஆண்டை ஒப்பிடும்பொழுது இரு மடங்காக, 13,000 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவும் அய்ரோப்பிய ஒன்றியமும் கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்பதோடு, அந்நாடுகள் நேரடி மானியத்தை மறைமுக மானியப் பட்டியலுக்குக் கொண்டு சென்று தப்பித்துக் கொள்ளும் தந்திரத்திலும் ஈடுபட்டன. மறுபுறம், ஏழை நாடுகளின் உணவுச் சந்தையை ஏகாதிபத்திய நாடுகள் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடாகவே தோஹாவிலும் அண்மையில் பாலியிலும் நடந்த உலக வர்த்தகக் கழக மாநாடுகள் அமைந்தன.
இவற்றையெல்லாம் தாண்டி ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைக்குள் இந்தியாவின் விவசாய பொருட்கள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம்தான் மாம்பழ ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை..
மூன்றாம் உலக நாடுகளில் தமது நாடுகளின் நிறுவனங்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஊழையிடும் ஐரோப்பிய அரசு அந்த நாடுகளின் உள்ளூர் உற்பத்திகளை அனுமதிப்பதில்லை. தடைகள் அனைத்தையும் தாண்டி சர்வதேசச் சந்தையை எட்டினாலும் தடைசெய்வதற்கு வழியைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதற்கான உதாரணங்களே இவை. இந்த நாடுகளின் உள்ளூர் அடியாள் வியாபாரிகளான அம்பானி,டாட்டா போன்ற விரல்விட்டெண்ணக்கூடியவர்கள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.
இந்தத் தடை குறித்து ஐரோப்பிய யூனியன், ”இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் “சால்மொலினா” என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். எனவே, இந்த வெற்றிலைகளை இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளது.
salmonella is not a chemical, its a deadly bacteria