இந்திய மத்திய அரசு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்திய கொள்கையையே எப்பொழுதும் முன்னிறுத்தி வந்திருக்கிறது. தென் ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, முழு ஆசியாவிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்கும் நோக்குடனேயே அதன் கொள்கை வகுப்பு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென்னாசிய நாடுகள் ஒவ்வொன்றும் தனது பெரியண்ணன் பாத்திரத்தை ஏற்று நடக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்துகிறது. அதற்கு மறுத்தால் ஏதாவது ஒரு காரணங் காட்டி மிரட்டல், தாக்குதல் என இறங்குகிறது. இதற்கான உதாரணத்தை இலங்கை கடந்த காலத்தில் கண்டிருக்கிறது. இலங்கையின் இந்து சமுத்திர அமைவிடம் இப் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் வழங்குகிறது. உலக மேலாதிக்க அமெரிக்காவிற்கும் மேற்குலகுக்கும் இந்தியாவிற்கும் தேவைப்படும் தீவு இலங்கை நாடாகும். ஜே.ஆர். தன் அமெரிக்க விசுவாசம் காரணமாக இத் தீவை அமெரிக்காவிற்குத் தாரை வார்க்க முயன்ற வேளையிலேயே இந்தியாவும் இந்திராவும் இலங்கை விடயத்தில் அக்கறைப் பட்டனர். அதற்குக் கிடைத்த சந்தர்ப்பமே 1983ல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையாகும். அதன் பேரில் இந்தியா இலங்கையில் நுழைந்து கொண்டது. இந்தியா அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.
இந்தியா ஏன் அக்கறைப் படுகிறது என்பதை ஆராயவோ தூரநோக்கில் அதனை எடை போடவோ முடியாத பழைமைவாதப் பிற்போக்கு தமிழர் தேசியவாதத் தலைமை குறுந் தேசியவாத நிலைப்பாட்டில் இந்தியாவை விசுவாசத்துடன் நம்பியது. 1971ல் இந்திராவின் தலைமையில் இந்திய ராணுவம் பங்காளதேசத்தை பாகிஸ்தானில் இருந்து பிரித்தெடுத்துத் தனிநாடாக்கியது போன்று இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழத்தைப் பிரித்துத் தரும் என நம்பப்பட்டது. பாவம், ஏகப் பெரும்பான்மையான தமிழ் மக்களைத் தமிழர் கூட்டணியினர் நம்பவும் வைத்தனர். அவ் வேளை உண்மைகளையும் யதார்த்த நிலைமைகளையும் எடுத்துக் கூறி தமிழீழம் சாத்தியமற்றது என்பதை உறுதிபடக் கூறிய மாக்சிச லெனினிசவாதிகளின் தர்க்க ரீதியான கொள்கைகளை இத் தமிழ்த் தேசியவாதிகள் எள்ளி நகையாடினர். மாக்சிச சோ~லிச நிலைப்பாடுகளைத் தூற்றி இந்திய விசுவாசத்தை உச்சமாக வெளிப்படுத்தினர். இன்னொரு தரப்பினர் இஸ்ரேலை உருவாக்கிய மேற்குலக அமெரிக்க விசுவாசத்தில் மூழ்கினர்.
இச் சூழலில், இந்தியா தனது பிடியை முழு இலங்கை மீதும் கொண்டிருக்கக் கூடிய நிலைப்பாட்டை வலுப்படுத்தி வந்தது. அதற்கு இன்றைய மகிந்த சிந்தனை அரசு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவின் பொருளாதார ஊடுருடுவல் வேகமாக இலங்கைக்குள் பாய்ந்து வந்துள்ளது. விரைவில் இலங்கை இந்தியாவின் வலுவான ஒரு கொலனி நாடு என்ற இடத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதற்குத் தடையாக இருக்கும் எதனையும் இந்தியா சகித்து கொள்ள மாட்டாது. இந்த இடத்தில் இலங்கையின் பேரினவாத அரசினதும் இந்திய மேலாதிக்க அரசினதும் குவிமையம் ஒன்றாகவே உள்ளது. இதன் செயற்பாட்டைக் கடந்த மூன்று வருட மகிந்த சிந்தனை அரசின் நடவடிக்கைகளில் இருந்து கண்டு கொள்ள முடியும். இலங்கை இனப் பிரச்சினையில் அமெரிக்க மேற்குலக யப்பானியச் செல்வாக்கையும் தலையீட்டையும் இந்தியா அறவே விரும்பவில்லை. இது இப் பிராந்திய ஆதிக்கப் போட்டியின் உள்ளர்ந்த சாரம்சமாகும். புலிகள் இயக்கத்தின் சர்வதேச நேசசக்திகள் அமெரிக்க மேற்குலகில் கால் பதித்துள்ளதை இந்தியா ஏற்கனவே விளங்கிக் கொண்டது. நோர்வேயின் அனுசரனை முயற்சியின் உள்ளார்ந்தம் எத்தகையது, அதில் ரணில் விக்கிரமசிங்கவின் பாத்திரம் எத்தகையது என யாவற்றையும் விளங்கிக் கொண்ட இந்தியா தனது காய்களை நகர்த்த ஆரம்பித்தது.
அதற்கு மகிந்த சிந்தனை அரசு தகுந்த இடத்தை வழங்கியது. இந்திய மேலாதிக்க இராஜதந்திரம் பொருளாதார, அரசியல், ராணுவ விடயங்களின் ஊடாகச் செயலாற்றத் தொடங்கியது. நோர்வே அனுசரணை அரங்கில் இருந்து அகற்றப் பட்டது. அதன் தொடர்ச்சியாக ராணுவ அரசியல் விவகார நெருக்கங்களின் ஊடாக வன்னி மீதான தாக்குதல்களும் வெற்றிகளும் புலிகள் இயக்கத் தடையாகவும் விரிவு பெற்றுக் கொண்டது.
இந் நிலையில் அமெரிக்க மேற்குலகம் இந்தியாவுடன் நட்பு வலுவடைந்த நிலையில் இலங்கையில் எதுவும் செய்ய முடியாமல் திண்டாட்ட மௌனம் காத்து வருகிறது. இலங்கை அரசின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தம் என்ற முழக்கத்தின் முன் அமெரிக்க மேற்குலகம் அடக்கி வாசித்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே புலிகள் இயக்கத்தை அவர்கள் தடை செய்து விட்டனர். இறுதியாக இலங்கையும் தடை செய்து கொண்டது.
இந் நிலையில் தமிழ் நாட்டு ஆதரவு மட்டுமே தமிழர் தரப்புக்கு ஆறுதல் தரும் குரலாக ஒலித்து வருகிறது. ஆனால் அந்தக் குரல் நேர்மையான ஒருமுகப் படுத்தப்பட்ட குரல் அல்ல என்பது தமிழ்நாட்டுக் குத்துக்கரண அரசியலைப் புரிந்து கொண்டவர்களுக்குத் தெரியும். தமிழ் நாட்டுக் கட்சிகளால் இந்திய மத்திய அரசிடம் மன்றாட முடியுமே தவிர அதை வற்புறுத்திக் காரியம் எதனையும் சாதிக்க முடியாது. இதுவரை அவ்வாறு நடந்ததும் இல்லை. இனிமேலும் அவர்களால் நடத்தவும் முடியாது.
இலங்கையில் யுத்தத்தை நிறுத்த இந்திய மத்திய அரசு ஒருபோதும் முன்வர மாட்டாது. ஏனெனில் அதன் சைகையின் மீதே வன்னி யுத்தம் ஆரம்பிக்கப் பட்டது. ஆயத, ராணுவ உதவிகள் வழங்கப் பட்டன. இத்தனைக்குப் பின்பும் மத்திய அரசையும் மாநில அரசையும் தமிழர் தரப்பு கெஞ்சி நிற்பது சுயசார்புப் போராட்டக் கொள்கை அற்ற பலவீனத்தின் வெளிப்பாடாகும். அடித்தாலும் உதைத்தாலும் காறி உமிழ்ந்தாலும் நீங்களே எங்கள் எசமானர்கள் எனத் தமிழர் தரப்பினர் நடந்து கொள்வது ‘தன்மானத் தமிழினத்தை” இழிவு செய்ததாக அமையாதா? எவ்வாறாயினும் தமிழர் தரப்பிலிருந்து இத்தகைய எதிர்ப்பார்ப்பு நிலைப்பாட்டை மாற்ற முடியாது. அது அவர்களது பிற்போக்கு அரசியலில் ஊறி உறைந்து போன விடயமாகும். பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்க கூட்டமைப்பினர் எத்தனை தடவைகள் சென்று திரும்பினர். ஒரு ஐந்து நிமிடம் கூடச் சந்திக்க முடியவில்லை. கருணாநிதிக்கு வாக்குக் கொடுத்து பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகக் கூறினாராம் சோனியா காந்தி. ஆனால் இங்கு வந்து தமது உள் விவகாரங்கள் பற்றிப் பேசித் திரும்பியவர் சிவசங்கர மேனன். இவற்றின் உள்ளார்ந்தங்களைப் புரிந்து கொள்ளாது கூட்டமைப்பினர் மீண்டும் மீண்டும் மன்றாட்டப் பாடல் பாடுவது இலங்கைத் தமிழர்களுக்கு அவமானமே அன்றி வேறில்லை. இத்தகைய போக்கிலிருந்து தமிழர் தலைமைகள் விடுபடமாட்டா. ஆள்மாறி ஆள், இந்திய விசுவாசிகளாகத் தம்மை தகவமைத்துக் கொள்ளவே செய்வர். அந்தளவுக்கு இந்திய மேலாதிக்கம் சகல நிலைகளின் ஊடாகவும் ஊடுருவி நிற்கின்றது.
இந் நிலைக்கு எதிராகத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து நேர்மையும் தூரநோக்கும் கொண்ட அரசியல் சக்திகள் எழ வேண்டும். கடந்த காலப் பட்டறிவுகள் படிக்கப்பட வேண்டும். தூரநோக்கில் சுயநிர்ணய உரிமையை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் எவ்வாறு வென்றெடுப்பது என்பது பற்றியும் அதற்கான கொள்கை கோட்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் தெளிவான முடிவுகளுக்கு வரவேண்டும். நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பது தெளிவுடன் வகுக்கப்பட வேண்டும். தேசிய இனங்களுக்கான சுயாட்சி, சுயாட்சி உள்ளமைப்புகள் அரசியல் தீர்வாக உருவாக்கப் படுவதன் மூலம் ஐக்கியமும் பலமும் சுபீட்சமும் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை தெற்கின் சாதாரண சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். எந்தவொரு போராட்டமும் வெறுமனே பலவான்கள் நவீன ஆயுதங்கள் மூலம் மட்டும் வெற்றி பெற மாட்டாது. மக்களின் போராட்டமாக அமைய வேண்டும். அவர்களது சொந்தத் தலைவிதியைத் தாங்களே தீர்மானித்துப் அவர்களே போராட்டத்தின் நாயகர்களாக மாற வேண்டும். அதை விடுத்து அவர்களுக்காக ஒரு சிலர் எவ்வளவு வீரர்களாக இருந்தாலும் போராடி வெற்றி பெற முடியாது. இது தான் வரலாறு கற்பித்துத் தரும் பாடமாகும். ‘மக்களே, மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி” என்பது மறக்கப்பட முடியாத வரலாறுப் பாடமாக அமைய வேண்டும். உண்மையான மக்கள் போராட்டத்தில் மக்கள் ஒரு போதும் தோல்வி அடைவதில்லை. இறுதி வெற்றி அவர்களுக்கு உரியதாகவே இருக்கும். அதற்குரிய தெளிவானதும் சரியானதுமான போராட்டப் பாதையில் பயணித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதற்குரிய அடிப்படைகளைத் தேடிக் கொள்வது இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மத்தியில் தேவைப்படும் ஒன்றாகும்.
நல்ல கட்டுரை.இதை பிரசுரம் செய்ததன் மூலம் தான் இந்தியாவிற்கு விலை போகவில்லை என்பதை “இனி ஒரு” நிரூபித்துள்ளது.அதற்கு என் பாராட்’டுக்களும் வாழ்த்துக்களும்.நன்றி.
1983ம் ஆண்டு இந்திய அரசு விரும்பிருந்தால் தமிழ் மிதவாத தலைமைகளான த.வி.கூ மூலம் ஒரு தீர்வை இலங்கைஅரசுடன் எட்டியிருக்கமுடியும்.ஆனால் இந்திய அரசு மிதவாத தலைவரான அமிர்தலிங்கம் தடுத்தும்கூட போராளிகளை அழைத்து பயிற்சி ஆயுதம் கொடுத்து போராட்டத்தை தூண்டிவிட்டது.ஆனால் இன்று அது அதே போராளிகளை பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதிகளுடன் தான் பேசமுடியாது என்று கூறி அழிக்க உதவி வருகிறது. இனியாவது தமிழ்மக்கள் இந்தியாவின் இந்த போலி வேடத்தை இனங்கண்டு அதனை அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு அகதிமுகாம்கள் அடிப்படை வசதிகள் அற்றவை.அங்கு வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்படுகின்றனர்.அதுமட்டுமின்றி பல இளைஞர்கள் சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்படுகின்றர்.இவை பற்றி தமிழ்நாட்டு தலைவர்களோ அன்றி யாருமே வாய் திறப்பதில்லை.ஆனால் அவர்கள் வன்னி மக்கள் பற்றி கவலைப்படுகிறார்களாம்?இதைத்தான் ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் அழுவது என்று கூறுவதா?
புலிகள் பற்றி மற்றும் இலங்கை அரசு பற்றி எதிர்த்து முழங்கும் பலர் இந்த யுத்தத்தை பின்னால் இருந்து நடத்தும் இந்திய அரசு பற்றி வாய் திறப்பதில்லை.இலங்கையின் இன்றைய பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்திய பங்கு பற்றி மூச்சுக் கூட விட மறுக்கின்றனர்.இது ஏன்?
இந்திய இராணுவத்திற்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளை தோழர் சண்முகதாசன் கூறினார் ” எவர் இந்தியஅரசை எதிரி என்று இனம் காண்கிறாரோ அவர் தமிழ்மக்கள் பக்கம் இருக்கின்றார்.எவர் இந்திய அரசை நண்பன் என்று கூறுகிறாரோ அவர் தமிழ் மக்களின் துரோகியாவார்” அவர் அன்று கூறிய வார்த்தைகள் இன்றும் சரியானவை என்பதை சம்பவங்கள் எமக்கு நன்கு நிரூபிக்கின்றன.
என்.ஜி.ஓ பற்றியும் அதனுடன் தொடர்பு கொண்ட தமிழ்அமைப்புகள் பற்றியும் அம்பலப்படுத்தி கட்டுரை எழுதியுள்ள நாவலன் அவர்கள் இந்திய அரசு பற்றியும் அம்பலப்படுத்தி கட்டுரை எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறீலங்கா தூதுவராலயம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோர் யத்த நிறுத்தம் வேண்டி இந்திய தூதுவராலயம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முன்வருவார்களா?
மாதாமாதம் பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருப்பவர்களை அம்பலப்படுத்த “இனி ஒரு” முன்வருமா?
அன்புள்ள வெகுஜனன். தங்களது கட்டுரை இன்றைய இலங்கை அரசியலில் இந்தியாவின் தாக்கம் எப்படியுள்ளது என்பதை நோக்குவதாக உள்ளது. அதாவது, இந்திய பெரும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசாங்கம் தற்போதைய உலகமயச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனது மூலதனத்தை வெளிநாடுகளுக்கும் கொண்டுச் சென்று தனது சுரண்டல் கொள்கையை பலப்படுத்திக் கொள்கிறது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு மாற்று இல்லை.
அதே சமயம் ஒரு நாட்டின் இறையாண்மையின் மீது மற்ற நாடுகள் எப்படி தலையிடக் கூடாது என்று விரும்புகிறோமே! அதேபோல் உலகையே தனது கையில் திணிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய அரசியலை முறியடிப்பதே இன்றைய உலகின் பிரதான கடமையாக முன்னிற்பதாக நான் கருதுகிறேன்.
குறிப்பாக, அமெரிக்காவின் சுரண்டல் கொள்கைகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் மரண அடி விழுந்துக் கொண்டிருக்கும் தருவாயில் அது மத்திய ஆசியாவையும், தற்போது தெற்காசியாவையும் கபளிகரம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த காலத்தில், குறிப்பாக இந்திராகாந்தி பிரதமராக இருந்த சூழலில் இலங்கையில் உள்ள புலிகள் உட்பட பல்வேறு குழுக்களுக்கு இந்திய மண்ணில் ஆயுதம் கொடுத்து பயிற்சி அளித்ததும், அதன் பின்னர் அமைதிப்படை என்ற பெயரில் செய்த அத்துமீறல்களும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தற்போதைய இந்திய அரசு கடந்த காலத் தவறுகளிலிருந்து ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். அதாவது, இலங்கையின் உள் விவகாரத்தில் ஒரு பலமான குத்துவிடுவது என்ற நிலையிலிருந்து வேறுபட்டு நிற்பதாகவே நான் உணர்கிறேன் – புரிந்து கொள்கிறேன்.
மேலும், இந்திய அரசின் தலையீட்டைக் காரணம் காட்டி ஏகாதிபத்திய தலையீட்டை பின்னுக்குத் தள்ளும் அபாயம் நேரிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது. சமீபத்தில்கூட திரிகோணமலையில் அமெரிக்கா இராணுவ ரீதியான பாதுகாப்பு அம்சங்களை முன்னெடுக்க முனைந்த விசயங்கள் முன்னுக்கு வந்தன. இருப்பினும் ராஜபக்ஷே அரசு தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமெரிக்காவிற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறியிருப்பது பொருள் பொதிந்ததாகவே கருதுகிறேன். இதற்காக நான் இராஜபக்ஷேவின் ஆதரவாளர் என்று பட்டம் சுமத்த வேண்டாம்.
இறுதியாக, இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் மக்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஒரு அரசியல் ரீதியான மாற்றம் தேவைப்படுகிறது. குறிப்பாக இதற்கான நகர்வு என்பது மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச முன்னோக்கு கொண்ட அரசியல் மாற்றத்தால்தான் ஏற்படுத்த முடியும். இல்லையென்றால் இலங்கைக்குள் பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழலாம். மக்கள் பிரச்சனை மட்டும் தீராது என்ற உண்மையை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். எனவே, இதற்கான வேலைகள் எங்கிருந்து துவங்க வேண்டும் என்றால் இதற்கு இலங்கையில் உள்ள சுரண்டப்படும் சிங்கள மற்றும் தமிழ் மற்றும் மலையக மற்றும் இசுலாமிய தமிழர்கள் உள்ளிட்ட உழைப்பாளிகளின் ஒற்றுமையை கட்டுவது என்ற நோக்கோடு இணைந்ததாக இருக்க வேண்டும். நமது கருத்தியல் போர் அதனைச் சார்ந்ததாக அமைவதே பொருத்தாக இருக்கும்.
பிடித்திருக்கிறது