அமிர்தஸன் 7/4/2008 3:37:50 PM – தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி சமீபகாலமாக பலருடைய மனதில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசகர் அம்.கே. நாரயணன் தலைமையிலான மூன்று பேர்கொண்ட இந்திய அதிகாரிகள் தலைமையிலான குழு கொழும்புக்கு வந்து சென்ற பின்னர் சந்தேகங்கள் வலுவடைந்துள்ளன. அவ்வாறான சந்தேகங்களையும் கேள்விகளையும். இரண்டு வகைப்படுத்தலாம்.
ஒன்று நீதியான அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவிபுரியுமா? இரண்டாவது விடுதலை புலிகளை இராணுவ ரீதியில் பலவீனமடைய செய்வதற்குரிய வகையில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கப்போகின்றதா? இந்தியாவினுடைய நடைமுறை அரசியலை அவதானிக்கும்போது இந்த இரு கேள்விளும் முக்கியத்துவம் பெறுகின்றது. 1991 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு வகையான தலையிடா கொள்கையை பின்பற்றி வந்தது எனலாம். இந்தியாவினுடைய அரசியல் அதிகார சட்டமுறைமைகள் வெளியுறவு கொள்கைகள் என்பவற்றை அவதானிக்கும்போது இன விடுதலை போராட்ட இயக்கம் ஒன்றிற்காக அல்லது ஒடுக்கப்படுகின்ற இனத்திற்காக பேசுகின்ற அல்லது ஆதரவு வழங்கக்கூடிய பக்குவம்,இருக்கிறது.ஆனால் நடைமுறையில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய நிலமையும் அங்கு உள்ளது.
இந்திராகாந்தி பாக்கிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரித்துக்கொடுத்தார் என்பது வேறு. அல்லது 1980களில் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டது ஆகவே விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா ஊக்கம் கொடுத்தது என சிலர் நியாயப்படுத்தலாம். இந்தியாவின் அதிகாரமையங்களுக்கு உட்பட்ட அல்லது இந்திய பாதுகாப்பு துறையின் பிடிக்குள் இணைத்துக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள்தான் அவை. தனது நலனை மையப்படுத்திய தூரநோக்குடைய சிந்தனைகளுடன் கூடிய செயற்பாட்டு திறன் கொண்ட சிறப்பு இந்திய அதிகாரமையத்துக்கு உண்டு.
இந்தியாவின் இந்த வரலாற்றை, அனுபவத்தை படிப்பினையாக கொண்டதுதான் தமிழத்தரப்பினுடைய சமகால அரசியல் அணுகுமுறைகள் எனலாம். இருந்தாலும் இனநெருக்கடி தீர்வு விடயத்தில் இந்தியாவினுடைய ஆசீர்வாதம் தேவையென சில மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். பிரியங்கா நளினியை சந்தித்தவுடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி விடுதலை செய்யப்படவுள்ளார் என்ற எதிர்வுகூறல்களும் நம்பிக்கைகளும் அநாவசியமற்ற முறையில் விதைக்கப்படுகின்றன.
நளினியை சந்தித்த பின்னர்தான் விடுலைப்புலிகள் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியா நீதியான முறையில் தமிழர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோருபவர்கள் அல்லது இந்தியாவினுடைய ஆசீர்வாதத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த தடை நீடிப்பு தொடர்பாக என்னத்தை உணர்ந்திருக்கின்றார்கள்? அல்லது தடை நீடிப்பு மூலமாக இந்தியா தமிழ்த்தரப்புக்கு எதை உணர்த்தியிருக்கின்றது? கடந்தகால படிப்பினைகள் அனுபவங்களிலிருந்து இதற்கான பதிலை எடுத்துக்கொள்ள முடியும்.
தமிழ்த்தேசியத்திற்கு சாதகமாக தமிழகத்திலும் புதுடில்லியிலும் எழக்கூடிய ஆதரவு உணர்வுகளை மட்டுப்படுத்தக்கூடிய அல்லது அவ்வாறான சந்திப்புகள் மூலமாக தமிழர் விவகாரத்தில் நீதியாக செயற்படுவோம் என்பதை வெளிக்காட்டி அதன் ஊடாக உணர்வாளர்களை தங்கள் பக்கம் திசை திருப்புகின்ற, நம்பவைக்கின்ற ஏற்பாட்டு முயற்சியாகத்தான் அதனை பார்க்க முடியும். தனது மகள் கனிமொழியை பயன்படுத்தி ஈழத்தமிழருக்கு ஆதரவாக மிகக் கடுமையாக பேசவைத்து வைக்கோ, பழ.நெடுமாறன் ஆகியோருக்கு தமிழக மக்கள் வழங்கிய ஆதரவுகளை திராவிடமுன்னேற்றக்கழகத்திற்கு திசைதிருப்பிய கலைஞர் கருணாநிதியின் நடவடிக்கை போன்றதுதான் பிரியங்கா நளினி சந்திப்பு. அதனைவிட வேறு எதுவும் அந்த சந்திப்பில் இல்லை.
இந்தியாவினுடைய கடந்த கால அனுபவம் என்பது அல்லது இந்தியாவினுடைய நிலைப்பாடானது தமிழ்த்தரப்புக்கு எந்த வகையிலும் ஒருபோதும் சாத்தியமாகாது என்று தெரிந்தும் அவ்வாறு இந்தியாவினது ஆசீர்வாதத்தை வேண்டி நிற்பது அல்லது கற்பனைகளை வளர்த்துக் கொள்வதில் பயன் இல்லை. அதேவேளை இந்தியா நீதியான முறையில் செயற்பட வேண்டும் என கோருவதிலும் பல தர்ம சங்கடங்கள் உண்டு. குறிப்பாக இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கே அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஈழத்தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை இந்தியாவினால் எப்படி வழங்க முடியும்?
தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றபோதும் அதற்கு நேரடியான கண்டனங்களை தெரிவிக்க விரும்பாத இந்தியா ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து தனது உள்ளார்ந்தத்தை வெளிக்காட்டியுள்ளது. தனது எதிரிநாடுகள் என்று தெரிந்தும் சீனா, பாக்கிஸ்தானிடம் இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்வது குறித்து இந்தியா மௌனமாகவே இருக்கின்றது. விடுதலை புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச் செய்யவேண்டும் என்பது இந்திய பிராந்திய நலன்.
ஏவ்வாறாயினும் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்களை தனக்கு எதிராக திருப்பக்கூடிய சக்தி இலங்கை இராணுவத்திற்கு இல்லை என்று இந்திய பாதுகாப்பு துறைக்கு நன்கு தெரியும். ஆகவே புலிகளை இராணுவ ரீதியில் பலம் இழக்க செய்வதற்கு எந்த பேயிடம் இருந்தாவது இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்யட்டும் என்பது இந்தியாவினுடைய மற்றும் ஒரு நிலைப்பாடு. எனவே இந்தியாவினுடைய நீதியான தலையீட்டை கோருவது அல்லது ஆசீர்வாதத்தை எதிர்பர்ப்பது அரசியல் ரீதியாக ஏற்புடையதாகாது என்பதற்கு இவை உதாரணங்களாகும்.
தற்போதைய நிலையில் இருந்து புலிகள் இராணுவ ரீதியில் மேலும் பலமடையப்போகின்றார்கள் இராணுவ சமநிலை மேலோங்கலாம் என்ற எதிர்பார்ப்பு பல மட்டங்களிலும் நிலவுகின்றதுபோல் தெரிகின்றது. புலிகள் இன்னமும் நிலப்பரப்பை கைப்பற்றும் தாக்குதல் நடத்தவில்லை அவாகள் தற்பாதுகாப்பு தாகக்குதல்களையே நடத்துகின்றனர் என்று இராணுவ ஆய்வாளர்கள் அவ்வப்போது கூறிவருகின்;றனர். இது இலங்கை பாதுகாப்பு தரப்புக்கும் நன்கு புரிந்திருக்கலாம்.
இலங்கை அரசாங்கம் புலிகளிடம் தோற்றுப்போனால் பயங்கரவாதம் சர்வதேசத்தை வெற்றி கொண்டமைக்கு சமனாகி விடும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் கூறியமையானது புலிகளுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் உதவிகளை கோருவதற்கு ஒப்பானது. குறிப்பாக இந்தியாவின் உதவியை கோருவதுதான் அந்த வேண்டுகோள். இந்தியாவின் முன்று உயர் அதிகாரிகளின் திடீர் விஜயமும் அதன் அடிப்படையில் அமைந்ததுதான் என்று யாரும் சந்தேகம் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. நன்றி: தினக்குரல்