இந்தியா, சீனா இடையே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள் மேம்பட்டாலும், இரு நாடுகளுக்கிடையிலான எல்லை பதற்றமாகவே உள்ளதென்று அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பெண்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது.
சீனா தனது எல்லையைக் காக்க அதீத கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதும், கட்டுப்பாட்டுக் கோட்டை மீறுவதுமே இந்த பதற்றத்திற்குக் காரணம் என்று கூறியுள்ள பெண்டகன், ஆயினும் எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் படை பலத்தை அதிகரித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறியுள்ளது.
எல்லையில் நீண்ட தூர ஏவுகணையை நிறுத்தியுள்ளது சீனா
சீனா உருவாக்கியுள்ள அதி நவீன சி.எஸ்.எஸ்.-5 நீண்ட தூர ஏவுகணையை இந்தியாவுடனான எல்லையில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்றும், விமானப் படையை பயன்படுத்தி கூடுதல் படைகளை மிகக் குறுகிய நேரத்தில் எல்லைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளையும் சீனா செய்து வருகிறது என்றும் கூறியுள்ள பெண்டகன் அறிக்கை, இருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் படை அதிகரிப்பு நடவடிக்கைக்கான அறிகுறி ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது!
தனது எல்லை என்பது எதுவரை உள்ளது என்று சீனா கூறுகிறதோ அந்தப் பகுதியில்தான இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்றும், அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை என்பது கட்டுக்குள் உள்ளது என்றும் கூறியுள்ள பெண்டகன், டெல்லியும் பீஜிங்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதால் எல்லையில் பதற்றம் இருந்தாலும் அது கட்டுக்குள் உள்ளது என்று கூறியுள்ளது.