“இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?”
“உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அர சாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையைச் சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது.இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமை யால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதிர்ப் பவர்களை ராணுவம், போலீஸ், சல்வா ஜூடும் என கூலிப் படைகளைவைத்துக் கொல்வதற்கே தயங்காத அரசு, அவர்கள் தானாகவே முன்வந்து தற்கொலை செய்துகொண்டால் மகிழ்ச்சி அடையத்தானே செய்யும்!”
“ஈழப் போரில் தமிழர்கள் அழிக்கப்படுவதுபற்றியும், அது ஓர் இன அழிப்பு என்பதையும் நீங்கள் எழுதினீர்கள். ஆனால், போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளின்போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?”
எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என்.ஏ-ல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவுஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்?
உண்மையில், இலங்கையின் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தக்கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் தமிழக அரசியல் கட்சிகள்தான். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. போராட்டங்களை ஒரு சடங்கு ஆக மட்டும் நிறுத்திக்கொண்டுவிட்டனர். இப்போதைய பசுமை வேட்டை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பும் அரசியல் கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. ஆனால், இதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில், நம் நாட்டில் காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை புறத்தோற்றத்தில் மட்டுமே அந்தப் பெயருடன் உள்ளன. உண்மையில் அவை, டாடா கட்சி, அம்பானி கட்சி, மிட்டல் கட்சியாகத்தான் செயல்படுகின்றன!”
அருந்ததி ராயின் நேர்காணல் ஒன்றிலிருந்து…