13.09.2008.
இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கு இந்திய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். |
இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவிகளை வழங்கப்படுகின்றதா என்பது தொடர்பிலான கேள்விக்கு மௌனத்தை கலைத்து இந்திய மத்திய அரசாங்கம் பதில் கூறவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.இந்தியா, இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் ஏன் தேவையான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்குகிறதா என்ற சந்தேகம் கடந்த வாரத்தில் வவுனியாவில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலின் போது இரண்டு இந்திய வீரர்கள் காயப்பட்டமையின் மூலம் ஏற்பட்டுள்ளதாகவும் ராஜா குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் அரச சார்பற்ற அமைப்புகளை வன்னியில் இருந்து விலகிச்செல்லக் கோரியதை அடுத்து, அங்கு மக்களுக்கான உணவு விநியோகங்களில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராஜா சுட்டிக் காட்டியுள்ளார் |