கொரோனா பேரிடர் இந்தியாவை ஒட்டு மொத்தமாக நாசம் செய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,106 பேர் உயிரிழந்து உள்ளனர். இது போன்ற சூழலில்
கொரோனா பரவல் தொடர்பாக இந்திய அரசின் தலைமை ஆலோசகர் ஷாஹித் ஜமீல் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளது பல்வேறு மட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் “இந்தியாவில் கொரோனா பரவல் கைமீறிச் சென்று விட்டதாகவும் அரசு அறிவியலாளர்கள் சொல்வது எதனையும் கேட்பதில்லை” என்றும் சொல்லி தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் கொரோனா அலையின் போது இந்தியாவில் பரவும் கொரோனா திரிபுகள் குறித்து ஆராய இந்திய அரசு Indian SARS-CoV-2 Genome Sequencing Consortia (INSACOG) என்ற ஆய்வுக்குழுவை உருவாக்கியது. இதில் இந்தியாவின் முக்கியமான வைரலாஜிஸ்டுகள் அறிவியலாளர்கள் இடம் பெற்றனர். இந்தக் குழுவுக்கு தலைமையேற்றவர் மூத்த புகழ் பெற்ற வைராலிஸ்டான ஷாஹித் ஜமீல்.
சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் எவ்வளவு மோசமான இருக்கிறது என ஷாஹித் ஜமீல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மே 13-ஆம் தேதியன்று வெளியான அக்கட்டுரை பல அதிர்வலைகளை உருவாக்கியது. இந்தக் கட்டுரைக்குப் பின்னர் அவருக்கு எழுந்த அழுத்தம் காரணமான அவர் உயர் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார்.
அக்கட்டுரையில் ஷாஹித் ஜமீல் ”இந்தியாவில் கொரோனா மரணங்கள் அரசு காட்டும் எண்ணிக்கையை விட அதிகம் என்றும். இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை அதிரித்து பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவது அவசியம். பல மாநிலங்கள் ஊரடங்கை அமல் படுத்தியிருப்பது நிலமையின் தீவிரத்தை ஓரளவுக்கு குறைக்கும். மருத்துவர்கள், ஆக்சிஜன், விநியோகம் செவிலியர் பணி நியமனம் என பல விஷயங்களையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது மந்த கதியில் இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 7.5 மில்லியன் முதல் 10 மில்லியன் டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜமீல்.
அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் கொரோனா பரவல் தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் கடும் எதிர்ப்பு கிளம்புவதாகவும் 800 விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தொடர்பான மதிப்பீடுகளுக்காக கொரோனா தொடர்பான தரவுகளை வழங்குமாறு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். எந்த தரவுகள் அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் முடிவுகள் எடுக்காததால் கொரோனா பரவல் கைமீறீச் சென்று விட்டதாகவும் அக்கட்டுரையில் எழுதியிருந்தார்.
மாட்டுச் சாணம், ஹோமியன், குப்பைகளை எடுத்துப் போட்டு தீவைத்து அந்த புகையை சுவாசிப்பது, சாணிக்குளியல் செய்வது போன்ற மூடப்பழக்கவழக்கங்களையே இந்து மத தலைவர்கள் இந்திய மக்களுக்கு பரிந்துரைக்கும் நிலையில் அறிவியலாளர்கள் இந்தியாவில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையே ஷாஹித் ஜமீல் போன்றோரின் பதவி விலகல்கள் எடுத்துக் காட்டுகிறது.