இந்தியா முழுக்க 14 மாநிலங்களில் 29 சட்டமன்ற தொகுதிகள் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் பெருமளவு இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது.
ஆந்திரபிரதேசம், தெலங்கனா, கர்நாடகம், மேற்குவங்கம், அரியானா,பீகார், அசாம், இமாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேகாலயா, நாகாலாந்து என 14 மாநிலங்களில் 29 சட்டமன்ற தேர்தல்களுக்கான தேர்தல் அக்டோபர் 30-ஆம் தேதி நடந்தது. அந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில்,
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக படு தோல்வியடைந்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் ஐந்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. பாஜக ஆளும் கட்சியாக உள்ள இமாச்சல்பிரதேச மாநிலத்தில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் ஒன்றில் காங்கிரஸ் கட்சியும் இன்னொரு தொகுதியில் சுயேட்சையும் வென்றுள்ளார்கள்,மத்தியபிரதேசத்தில் மூன்று தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் இரண்டில் பாஜகவும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். மற்றுமொரு தொகுதியான சிந்கி சட்டசபை தொகுதியில் பாஜக வென்றுள்ளது.
நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவரவில்லை. ஆனால் மொத்தமாக இந்த தேர்தல்களில் பாஜக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால் இந்த தோல்வி இந்திய அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருமா என்பது சந்தேகம்தான். காரணம் இந்துத்துவத்தின் இதயப்பகுதியான உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக பலமாகவே உள்ளது.