இந்தியா, சீனா இடையே தூதரக உறவு தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடும் வகையில் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். சீன அதிபர், பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்திய அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கு சீனா ஆதரவு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைத்துள்ளார். ÷விப்ரோ நிறுவனம், ஹைட்ராலிக் சிலிண்டர் தயாரிப்பு ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சாங்ஸý நகரில் இந்த ஆலை அமைகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் விப்ரோ நிறுவனத்தின் சர்வதேச பிரிவுத் தலைவர் ஹரீஷ் ஜே ஷா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஷென்-ரூய்கிங் ஆகியோர் கையெழுத்திட்டனர். ÷உயர் அழுத்த ஹைட்ராலிக் கலன் தயாரிப்பு ஆலை மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு வசதியும் இங்கு அமைக்கப்படும். இன்ஃபோஸிஸ் நிறுவனம் ஜியாக்ஸிங் பகுதியில் ஒரு கல்வி மையத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம் 1,000 சீன பொறியியல் மாணவர்களுக்கு சாஃப்ட்வேர் பயிற்சியை இன்ஃபோசிஸ் அளிக்கும். இதற்கான ஒப்பந்தத்தில் இன்ஃபோசிஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரங்கராஜனும், நான்ஹு மாவட்ட மேயர் பூங் மியாஹு ஆகியோர் கையெழுத்திட்டனர். சீனாவின் செப்கோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் அனல் மின் நிலைய விரிவாக்கம் செய்வது தொடர்பான மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கெனவே இந்நிறுவனம் 350 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி ஆலையை ஒரிஸôவில் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தற்போது கூடுதலாக 1050 மெகாவாட் மின்னுற்பத்தி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சீனாவின் செப்கோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் வாங் லிங்ஃபாங், ஜிஎம்ஆர்கே எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.வி.வி. ராவ் கையெழுத்திட்டனர். மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்பாக ஆராய்ச்சிக்கு தனி இருக்கை ஏற்படுத்த ஃபூடான் பல்கலைக் கழகம் முன்வந்துள்ளது. இந்தியா-சீனா இடையிலான கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும் வகையிலான இந்த ஒப்பந்தத்தில் சீனாவுக்கான இந்திய தூதர் எஸ். ஜெய்சங்கரும், ஃபூடான் பல்கலைக் கழகத் தலைவர் யூ லியாங்கும் கையெழுத்திட்டனர். குடியரசுத் தலைவரின் இந்தப் பயணம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இவருடன் 50 நிறுவனங்களைச் சேர்ந்த 57 வர்த்தக பிரதிநிதிகள் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தங்களை செய்து கொண்டதோடு, விரிவாக்க நடவடிக்கைக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டன. ÷சுற்றுப்பயணத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை இந்தியா-சீனா வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பேசியது: ÷ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா இடையிலான வர்த்தகம் மேலும் வலுவடைய இந்த சுற்றுப் பயணம் உதவிகரமாக அமைந்தது. சீன நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றார். இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.