25.10.2008.
இந்திய மத்திய அரசாங்கம் என்னதான் அழுத்தங்களை எதிர்நோக்கினாலும் இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைக்கவேண்டுமென எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையென இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
‘இந்தியா இலங்கைக்கு நட்புரீதியான ஆலோசனைகளையே’ வழங்கியுள்ளது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் என்.என்.ஜா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
“இலங்கைக்கு, இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இன்ன தீர்வை முன்வைக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை. என்ன பிரச்சினை தோன்றினாலும் அதனைத் தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஷ்பரம் புரிந்துணர்வு உள்ளது” என ஜா தெரிவித்தார்.
தேர்தல் நெருக்கியுள்ள நிலையில் தமிழகத்திலுள்ள கட்சிகள் புதுடில்லிக்கு இலங்கை விடயத்தில் அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இனப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசாங்கம் சில முன்மொழிவுகளை முன்வைத்திருப்பதாகவும் கூறினார். அதேநேரம், உள்விவகாரத்தில் தலையிடாமல் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தினால் அது பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மனிதநேயப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்காத எந்த விதமான இராணுவ நடவடிக்கைகக்கும் இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் ஜா மேலும் கூறினார்.