இலங்கையில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் பிற்போட வேண்டும். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் குறித்து பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜே.வி.பி. அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய நிறுவனத்துடனான எண்ணெய்வள ஆய்வு உடன்படிக்கை தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
மன்னார், கடற்பரப்பில் எண்ணெய் வள ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் “”க்லான்” நிறுவனத்துடன் இன்று அரசாங்கம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. யின் பாராளுமன்ற குழுத் தலைவரும் எம்.பி. யுமான அனுர குமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் “”க்யான்” நிறுவனத்துடன் இலங்கை இன்று 7 ஆம் திகதி உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடவுள்ளது.
உலகில் வறுமை நாடுகள் எண்ணெய் வள ஆய்வுகள் தொடர்பாக செய்து கொண்ட உடன்படிக்கைகளால் அந்த நாடுகள் சந்தித்த பின்னடைவுகள் ஏராளமாகும். எனவே இன்று செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையும் எமது நாட்டிற்கு தீர்க்கமானதாகும்.
ஐ.தே.க. ஆட்சிக் காலத்திலும் அவசர அவசரமாக நோர்வே நிறுவனமான ரி.ஜி.எஸ். நொபெக் நிறுவனத்துடன் எண்ணெய் வள ஆய்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இது நாட்டிற்கு பாதகமான உடன்படிக்கையாகும். எனவே உங்களது தலைமையிலான அரசாங்கம் அவ் உடன்படிக்கையை இரத்துச் செய்தது. இதனால் நொபெக் நிறுவனத்திற்கு நஷ்டஈடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த அரசாங்கத்திற்கு நேரிட்டது. எனவே எண்ணெய்வள ஆய்வுகள் தொடர்பாக எந்தவொரு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்ய முன்னர் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு கேட்டுக் கொள்ள முடியும். இதனை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இன்று எந்தவொரு குழுவும் நியமிக்கப்படாது எண்ணெய் வள ஆய்வு உடன்படிக்கையை அரசாங்கம் தன்னிச்சையாக மேற்கொள்ள முயல்கிறது. எனவே அவசரமாக இவ் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதை பிற்போட்டு அதன் உள்ளடக்கத்தை பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும்