இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மரண எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் நேற்று ஒரு நாள் உயிரிழப்பில் மட்டும் 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக இரண்டாம் அலைத் தொற்றின் பாதிப்பால பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். தடுப்பூசி ஆக்சிஜன் தடுப்பாடு போன்ற பல அடிப்படை விஷயங்கள் கூட இல்லாமல் இந்திய சுகாதாரத்துறை தடுமாறும் நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்போர் விகிதமும், மரணமடைவோர் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள்.
ஒன்றிய அரசின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் இந்தியா முழுக்க 2,197 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிகார் மாநிலத்தில் மட்டும் 3,951 பேர் உயிரிழந்துள்ளார்கள். மொத்தத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.பிகார் மாநிலத்தில் இதுவரை கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டு வந்திருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.