உலகப்புகழ் பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநரும் மிகச்சிறந்த மருத்துவ சேவையாளருமான டாக்டர் சாந்தா தனது 93-வயதில் காலமானார்.
மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் பணியாற்றி இந்திய அளவில் முன்மாதிரி மருத்துவராகவும், அடையாறு புற்று நோய் மருத்துவமனையை தரம் உயர்த்தியும் வந்தவர் டாக்டர் சாந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
1927-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த டாக்டர் சாந்தா பள்ளிப்படிப்பை முடித்து 1949-ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவக்கல்வியை முடித்தார். பெண்கள், குழந்தைகள் மருத்துவம் தொடர்பான அவரது மருத்துவச் சேவையாற்றினார். பின்னர் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார். கல்வியை முடித்து கனடா சென்று அங்கு பணியாற்றிய டாக்டர் சார்ந்த மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இந்தியாவிம் முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், மூத்த முன்னோடி பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால் துவங்கப்பட்ட சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நிலைய அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். 1955-ஆம் ஆண்டு துவங்கி 2021 –ஆம் ஆண்டு வரை அவர் புற்றுநோய் மருத்துவமனையிலேயே பணி செய்து மரணமடைந்துள்ளார்.
சாந்தா பணிக்குச் சேர்ந்த போது 12 படுக்கைகளுடன் இருந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இப்போது ஆயிரம் படுக்கைகளுடன் உள்ளது. சர்வதேச அளவில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பிரபலமடைய அவர் காரணமாக இருந்தார்.
கொரோனா காலத்தில் மிகப்பெரிய நிதி நெருக்கடியை கேன்சர் மையம் சந்தித்த போதும் அதை துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றிகரமாக நடத்திய டாக்டர் சாந்தாவின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.