இயற்கையின் சீற்றங்களைத் தாங்கக் கூடிய அளவிற்கு இந்தியாவின் அணு மின் உலைகள் பாதுகாப்பானவையே என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
ஜபானின் தொழில் நுட்பம் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பலமடங்கு முன்னேற்றமடைந்தது என்பதையும் இந்தியவின் நிறுவனமயமான ஊழலையும் உலகம் அறிந்துள்ள நிலையில் இவரின் கூற்று கேலிக்கிடமானது.
ஜப்பானைத் தாக்கிய பயங்கர பூகம்பத்தினால் அந்நாட்டு அணு மின் உலைகள் செயலிழந்து, அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அணு உலைகள் தொடர்பாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள அச்சத்திற்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார் அனில் ககோட்கர்.
மும்பை வித்யாபவனில், வி.எஸ்.பேஜ் நினைவாக இயங்கிவரும் நாடாளுமன்ற பயற்சி மையத்தில் அணு சக்தியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றிய அனில் ககோட்கர், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், ஆழிப்பேரலையினாலும் ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு அணு உலை வடிவமைப்பில் பல மேம்பாடுகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் இயங்கிவந்த அணு உலைகள் மிகப் பாதுகாப்பானவை என்று கூறிய அனில் ககோட்கர், அங்குள்ள அணு உலைகள் வெடித்ததற்கு, அணு உலைகளை குளிர்விக்கக்கூடிய இயந்திரம் ஆழிப்பேரலை தண்ணீரால் சூழப்பட்டு இயங்காமல் போனதே காரணம் என்று கூறியுள்ளார்.
ஜப்பான் அமைந்துள்ள நிலப்பகுதியில் நிலவும் புவியியல் தாக்குகளுக்கும், இந்தியாவின் புவியமைப்பில் நிலவும் தாக்கங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்றும் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.