பஞ்சாப்பைச் சேர்ந்த இந்திய இளைஞர் நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதால் இந்தியா-ஆஸ்ட்ரேலியா இடையிலான இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மெல்பர்னில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்ட்ரேலியாவுக்கான இந்திய துணைத் தூதர் வி.கே.ஷர்மா, “ஆஸ்ட்ரேலிய அயலுறவு விவகாரத்துறை அதிகாரிகளை சந்திக்க இந்தியத் தூதர் சுஜாதா சிங் முடிவு செய்துள்ளார். விரைவில் இந்தச் சந்திப்பு நிகழும்” என்றார்.
கடந்த 2ஆம் தேதி இரவு மெல்பர்னின் சோமவில்லி சாலை-ஜீலாங் சாலை சந்திப்பில் நிதின் கார்க் அடையாளம் தெரியாத ஆஸ்ட்ரேலியரால் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிதின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிதின் மீதான தாக்குதலுக்கு ஆஸ்ட்ரேலியா துணை பிரதமர் ஜூலியா கில்லார்ட் கடும் கண்டனம் தெரிவித்தார். இதேபோல் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியர்கள் மீதான தாக்குதலால் இருநாட்டு உறவு பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.