13வது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென நம்பிக்கை தெரிவிக்கும் அமைச்சர் ஜனாதிபதியும் அதனை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
சமூக சேவை, சமூக நலன்புரி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்; அரசியல் வரலாற்றினை நோக்கும்போது இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் அரசாங்கங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஜனாதிபதி பிரேமதாசவிலிருந்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் புலிகள் இவை எதனையும் ஏற்கவில்லை.
திம்பு பேச்சுவார்த்தை கூட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வெளிக்கொணரும் ஒன்றாகவே அமைந்திருந்தது. எனினும் அன்று அதற்குத் தலைமை தாங்கிய தலைவர்களே இன்றில்லை.
இலங்கை- இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். அதனைத் தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டுவிட்டனர். இந்த விடயத்தில் நான் இந்தியப் படையையோ இலங்கைப் படையினரையோ குறைகூறமாட்டேன். புலிகள் தாமும் அழிந்து தமது மக்களையும் அழியவிட்டுள்ளனர்.
புலிகளின் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் பிரச்சினை வேறு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.