அந்தக் காலத்தில் கஸ்புஸ் மாஸ்டரிட்ட இங்கிலீசு படிச்சு முன்னுக்கு வந்தாக்கள் ஏராளமெண்டு என் ஆருயிர் நண்பன் சொல்லிக் கேட்டுப் புழகாங்கிதம் அடைஞ்சிருக்கிறன். கனகாலமா கஸ்புஸ் ஆகு பேயரா காரணப் பெயரா என்று ஓடித் திரிஞ்சு விசாரித்ததில கஸ்புஸ் மாஸ்ரரின்ட முதலாம் மனிசிக்குப் பேர் கஸ்தூரி என்றும் இரண்டாம் மனிசிக்கு புஸ்பராணி பேர் என்றும் தெரிந்து அது காரணப்பேர் தான் என்ற முடிவுக்கு வர எடுத்த காலத்தில கொஞ்ச நஞ்ச இங்கிலீசுவும் மறந்து போச்சு.
பிறகு லண்டனில வந்து சுப்பர் மார்க்கட்டில தமிழ் அறிஞர்களோட வேலை செய்ததில மிஞ்சின இங்கிலீசுவும் மறந்து போச்சு. தமிழோ 30 வருசத்துக்கு முந்தின் மூத்த தமிழ். அந்த வகையில் சோளன் ஆகிய அடியேனும் மூக்காத எழுத்தாளர்களுக்கு மத்தியில் மூத்த எழுத்தாளனானான் என்பதெல்லாம் மேலதிக தகவல்கள்.
சோளன் ஆகுபயரா காரணப் பெயரா என்று கன்னா பின்னா என்ற ஆராச்சியில் ஈடுபட்ட பலபேருக்கு ஒரு உண்மையைச் சொல்லியாக வேணும்.
சோளன் யாழ்ப்பாணத்து அறிவாளிகளில் ஒருவன். நல்ல தண்ணி என்றால் இப்ப எல்லாம் மினரல் வாட்டார் மாதிரி, யாழ்ப்பாணத் தமிழ் மினரல் தமிழ் என்று சொல்லிக் கேட்டு வளர்ந்தவன் இந்தச் சோளன். வடக்கத்தையானுக்கு மூண்டு சுழி ‘ண’ க்கும் இரண்டு சுழி ‘ன’ க்கும் வித்தியாசம் தெரியாது; மலையகத்தானுக்கு ‘ல’ க்கும் ‘ள’ க்கும் வித்தியாசம் தெரியாது; மட்டக்களப்பான் க்கன்னா போடமாட்டான் என்று கல்தோன்றி மண்தோன்றா டைனோசோர் காலத்துப் பெருமைகளைப் பேசக் கேட்டே எழுத்தாளனானவன் சோளன்.
ஒரு நாள் இலங்கையின்ர மூளையான யாழ்ப்பாணத்துக்கு வெளியால வந்து வன்னியில நின்று சிந்திக்கேக்க தான் தெரிஞ்சுது ‘ழ’ க்கும் ‘ள’ க்கும் வித்தியாசம் தெரியாமல் கதைக்கிற யாழ்ப்பாணப் பழங்குடிகள் மற்றவனை எல்லாம் பேப்பட்டம் கட்டுறாங்கள் என்று. அட சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் யாள்பாணத்துக்குமே வித்தியாசம் இல்லாமல் உச்சரிக்கிற யாழ்(ள்)ப்பாண மூத்த எழுத்தாளன் சோளனுக்கு அப்புவும் ஆத்தையும் வச்ச பேர் சோழன் தான். சக மூத்த எழுத்தாளர்கள் எல்லாம் சோழனை சோளப்பொரி ஆக்கியதால சோளன் காரணப்பெயர் தான்! யாழ்ப்பாணத் தமிழன்ர திமிரின் குறியீட்டுப் பெயரே சோளன்.
இங்கிலீசையும் தமிழையும் சேர்த்து இரட்டைக்கொலை செய்து போர்க்குற்றத்துக்கு உள்ளாகியிருக்கும் தென்னிந்திய தொலைக்காட்சிகளோடை யாழ்ப்பாணத் தமிழ் உசத்தி தான் என்று தேற்றிக்கொள்வான் சோளன்.
எங்கட தமிழ் வாத்தி வல்லிவுரத்தாற்ற மூத்த மகன் 1980 ஆம் ஆண்டே லண்டனுக்கு வந்து தேசியவாதி ஆனவன். அவன்ர பிள்ளைகளையும் தேசியவாதிகள் ஆக்கி இனத்துக்குப் பெருமை வேற சேர்த்தவன். பிள்ளைலின்ர தமிழ் சும்மா அப்பிடி இப்பிடி என்றாலும் தமிழ் உணர்வு மட்டும் இருக்கும். இங்கிலீசு ஓ பொசிட்டீவ் ரத்தம் தமிழில தமிழ் ரத்தம்
மகள் தமிழினியை நல்ல இடத்தில் கல்யாணம் பேசி கரைசேர்க்க வேணும் என்று சாத்திரம் பார்க்க லண்டனுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் நாட்டு ஐயரிட்ட குறிப்போட மகளை அனுப்பினதாலதான் காலமே சரியில்லாமப் போனது.
குறிப்புப் பார்க்க வெளிக்கிட்ட ஐயரின்ட பேரோ கல்யாணம். மங்களகரமான பேர். தமிழினிக்கோ கல்யாணம் சரியா வாய்க்குள்ள நுளையாமல் போக, மிஸ்டர் மரேஜ் என்று கூப்பிட, ஐயருக்கு வந்த கோபத்தில தமிழினிக்கு ஏழரச்சனி பிடிச்சிருக்கென்று சாத்திரத்தில எழுதிக்கொடுத்திட்டார். இதால மூன்று வருசமா தமிழினி கல்யாணம் இல்லாமல் அலைஞ்சு, போன மாதம் தான் மரேஜு முடிஞ்சிருக்கு. இப்படி புலம்பெயர் அடுத்த சந்ததியின்ர தேசியத் தமிழோட ஒப்பிடேக்க யாழ்ப்பாணத் தமிழ் மேல் தான்.
வல்லிவுரத்தாற்ற மகனுக்கோ இங்கிலீசு சுட்டுப்போட்டாலும் வரது. அந்தக் காலத்து தேசிய உணர்வில ஆங்கிலம் படியாதை என்று அப்பர் சொல்லி வளர்த்ததிலதான் அவனே லண்டனுக்கு வந்தவன். லண்டன் ஏயர்ப்போட்டிலையே மொழிபெயர்ப்பாளரின்ர வேலைக்கு உலை வைத்த பெருமை வல்லீன்ர மகனையே சாரும்.
1980 ஆம் ஆண்டு லண்டன் விமான நிலையத்தில ஏன் வந்தனி என்று போலிசுக்காரன் கேட்க கொழும்பில இருந்து நாவாந்துறைக்கு நடந்து போகேக்க ஆமிக்காரன் பிடிச்சுப்போட்டான் என்று சொல்லிச் சமாளிச்சுப் போட்டான். சரி, ஆமிக்காரன் பிடிச்சு என்ன செய்தவன் என்று கேட்க, அவன் பிடிச்சு ‘இதண்டிப்போட்டான்’ என்று வல்லீன்ர மகன் சொல்லியிருக்கிறான். ‘இதண்டினத’ மொழி பெயர்க்கத் தெரியாமல் மொழிபெயர்ப்பாளர் முழிக்க பொலிஸ்காரன் வல்லீன்ர மகன உள்ள விட்டுட்டு மொழிபெயர்ப்பாளரை வெளீயில விட்டுட்டான்.
யாழ்ப்பாணத் தமிழின்ர மகிமையோ மகிமை என்று விமான நிலையத்துக்கு வெளியால வந்த வல்லீன்ர மகன் ஒரு கேள்வியோடையே அகதி அந்தஸ்துத் தந்தவங்கள் என்று இப்பவும் பெருமையடித்துக்கொள்வான்.
அண்டைக்குத் தொடங்கின வல்லீன்ர மூத்த மகனின் லண்டன் வாழ்க்கை இப்ப அவனை ஒரு தேசியவாதி ஆக்கியிருக்கு.
உலகம் ஓடி, உருண்டு, எல்லாம் நடந்தாலும் வல்லீன்ர மகன் மாறவே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் மகிந்த ராஜபக்சவை ‘இதண்டப்’ போறாங்கள் என்று மேடைகளில் பேசுவான். கொடி பிடிக்காட்டி தமிழினம் இதண்டீரும் என்று சின்னப் பொடியளை விட்டு ஆலாத்தி எடுத்தவன். சனமும் இப்ப்ப இப்ப இவங்கள் இதண்டுறது எல்லாம் யாவாரத்துக்காகத் தான் என்று இதண்ட ஆரம்பிச்சுடுதுகள். இன்னும் எத்தின நாளைக்குத் தான் இந்தக் கோதாரிவிழுவாங்கள் இதண்டப் போறங்கள் என்று சோளன் யாழ்ப்பாணத் தமிழில் திட்டிக்கொண்டே நல்லாப் போத்துக்கொண்டு படுத்து இதண்டீட்டான்.
Ath, Ithu, Uthu are used heavily due to language bankruptcy and we did not develop word for many. We only gave Maths important and not the Language. Does not mean we are Brilliant at Maths. I completely agree with the author.
I saw in a TV programme someone said “Ithukalai seithal Athukal ellam nallai varum” so Anis asked ethukalai seithal ethukal ellam nallai varum. I just want to share a joke we did with our friends when we failed in exams 25 years ago, we say we write athu ithu uthu. Examiner don’t know ethu(Which) so he failed us.
மிக அருமை,நல்ல சுவை, இந்த தோட்ட காட்டடனை இதென்டி போடிங்கள்
யாழ்ப்பாணத் தமிழை மொழிபெயர்ப்பதே ஒரு தலையிடி. உதாரணமாக “அம்மா ஆக்கள்” அல்லது “அக்கா ஆக்கள் சொன்னவை” என்பார்கள். அந்த “ஆக்கள்” யார்? எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இச் சொற்களை எப்படிப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பது என்பது தெரியவில்லை.
அக்கா ஆக்கள் என்றால் ஒன்றுக்கு அக்காக்கள் என்றும் , அம்மா ஆக்கள் என்றால் அம்மா , சின்னம்மா , பெரியம்மா மற்றும் அம்மாவின் பிற உறவினர்கள் என்றும் பொருள் காண்க..
34 வருடங்களுக்குமுன் பாவம் அந்த மொழி பெயர்ப்பாளர்
இன்று பரிதாபத்துக்குரியவர்கள் கொடிபிடிப்போர்
கொண்டாட்டம் இதண்டப்போறாங்கள் என்போர்க்கு. “இதண்டிப்போட்டான்”
யாராவது இதை முடிந்தால் மொழிபெயர்தால் எதிர்காலத்திலாவது எங்கள் தமிழ் சமுதாயத்திற்கு உதவியதாக இருக்கும்
மொழி ஓட்டை இல்லாமல் ஒரு மொழியும் கிடையாது,காலத்திற்கு காலம் அந்த ஓட்டைகளை நிவா்த்தி செய்துவிடுகின்றாா்கள்.மேலே குறிப்பிட்டிருப்பது தமிழ் மொழிச்சொல் அல்ல கிராமமட்டத்தில் பேசப்படும்
SLANG மொழியாகும் இதில் ஆச்சாியப்பட எதுவும் இல்லை.
அது, உது இது, அல்லது அந்த, உந்த, இந்த, என்பது தமிழின் இடைநிலைச் சொற்கள். இவை சங்க இலக்கியங்களில் கூட பாவிக்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த பிரதேசங்களிலும் “உந்த” என்ற இடைநிலைச் சொல் பாவிப்பதில்லை தமிழ் நாட்டிலும் பாவிப்பதில்லை . அதேபோல் மட்டக்களப்பில் மாத்திரம் “கா” என்ற அசைச் சொல் பாவிக்கிறார்கள் உதாரணமாக மறு – பிறகு (மறுகால்), என்பதை “கா” என்ற அசைச்சொல்லை இணைத்து மறுகா என பாவிக்கிறார்கள். பிரதேச பேச்சு வழக்கை கொச்சை படுத்தும் அநாகரிகம் தமிழரிடம் உண்டு. மட்டக்களப்பின் நாகரிகம் தெரிந்த மனிதராக காட்டிகொள்ளும் சிலர் மட்டக்களப்பின் கிராமிய பிரதேச பேச்சு வழக்கை கொச்சை படுத்துவதை நான் நேரில் கேட்டு இருக்கிறேன். ஆனால் யாழ்பாணத்தவர் மிகவும் அநாகரிகமாக கிராமிய தமிழ் பேச்சு வழக்கை கொச்சை படுத்துவதில் விண்ணர்கள். பிறகு என்பதை பேந்து என பேசுவோர் யாழ்பாணத்தவர். இவ்வாறு பல பிழைகளை விட்டு பேசினாலும் யாழ்பாணத்தவர் தமது பிழைகளை திருத்துவதில்லை அல்லது அவர்களுக்கு தெரிவதில்லை. சோழனின் ஆக்கம் அருமை. சமூகத்தின் தவறுகளை மறு வாசிப்புக்கு உட்படுத்துவது ஆரோக்கியமானது. கஸ்தூரியையும் புஷ்பாவையும் சேர்த்து கஸ்புஸ் என அழைக்கப் படும் புட்டளை கஸ்புசரின் புரட்ச்சிகரத் தோற்றம் (மனைவியரின் பெயரை கொண்டியங்குவதால்)
மூலம் தனது கட்டுரையின் கதை சொல்லும் பாங்கை மெருகூட்டி ஒரு புரட்ச்சிகர விடயத்தை சிந்தனைக்குரிய விடயத்தை சொன்ன சோழன் பாராடுக் குரியவர். தமிழ் சமுகம் ஆரோக்கியமான முறையில் தம்மை மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் இதண்டமுடியும்.