யுத்தம் காரணமாக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இறுதி கட்டப் போரின் போது இவ்வருடம் மார்ச் மாதம் முதல் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தஞ்சமடைந்த பொதுமக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அகதிகளை சுதந்திரமாக இடம்நகர்வதற்கான உரிமை மறுக்கப்பட்டதன் மூலம் சர்வதேச சட்டங்களை அரசாங்கம் மீறியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அகதி முகாம்களில் உள்ள சொற்பளவான முதியவர்கள் மட்டுமே இதுவரையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய இலங்கையர்களைப் போன்றே அகதிகளும் சுதந்திரமாக வாழ உரிமையுடையவர்கள். 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் திகதி இராணுவப் பாதுகாப்புடன் கூடிய 30 முகாம்களில் 281,621 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே குறித்த மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். முன்னர் பிரபாகரனினால் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. தற்போது அரசாங்கம் அதே தவறை செய்கிறது என பிரேம் குமார் என்ற அகதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீது அரசாங்கம் காட்டும் கரிசனை போதுமானதாக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.