ஆஸ்திரேலிய சிறையில் வாடும் 46 ஈழத் தமிழர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் நாட்டு அகதி முகாம்களில் விலங்குகள் போல நடத்தப்படும் ஈழத்தமிழ் அகதிகள் தமிழ் நாட்டு அரசின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கொள்வதற்காகவே ஆஸ்திரேலியா செல்ல முனைகிறார்கள். அவ்வாறு தப்பிச் செல்லும் போது கைதாகும் ஈழத் தமிழர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். தமிழ் நாடு அகதி முகாம்கள்.. இலங்கையின் முள்வேலி முகாம்களாவது உலகத்துக்கு அம்பலமாகியிருக்கின்றன. தமிழகத்தின் அகதி முகாம்களின் ஈழத் தமிழ் மக்கள் படும் துயரம் யாருக்கும் தெரிவதில்லை. கொடுமை தாங்க முடியாமல் அகதிகள் தற்கொலைக்கு செய்திருக்கிறார்கள். குடும்பங்களைப் பிரித்து கிரிமினல்கள் போல தமிழ் நாடு போலிஸ் அவர்களை நடத்துகிறது. இரண்டாவது தலைமுறையாக ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக இருக்கும் நிலையில் வை.கோபாலசாமி என்ன நடவடிக்கை எடுத்தார். மத்திய அரசில் வை.கோ பங்கெடுத்த காலத்திலும் ஜெயலலிதாவை ஆதரித்த காலத்திலும் அகதிகளின் அவலம் அவரது மண்ணிலேயே தொடர்ந்தது.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆஸ்திரேலியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள 46 ஈழத் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி சென்றவர்கள்.
உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு கருணையோடு அடைக்கலம் தரும் நிலையில் ஆஸ்திரேலிய அரசு, பாதுகாப்பு உளவு நிறுவனம் அளித்த ஆலோசனையின் பேரில் 46 ஈழத் தமிழர்கள் கடந்த 5 ஆண்டுகளாக அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1948 டிசம்பர் 10-இல் அறிவிக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தில், கொடிய அடக்குமுறையில் இருந்து தப்பிக்க எந்த ஒரு நாட்டிலும் அடைக்கலம் கேட்கவும், பெறவும் உரிமை உண்டு என கூறப்பட்டுள்ளது. அனைத்து உலக ஒப்பந்தங்களின்படி, தமிழ் அகதிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஆஸ்திரேலிய அரசுக்கு உண்டு. அதற்கு மாறாக கடந்த பல ஆண்டுகளாக 46 ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்திருப்பதால் அவர்கள் தாங்க முடியாத துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழ் அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
எனவே, 46 தமிழ் அகதிகளையும் விடுதலை செய்து, அவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அடைக்கலம் தர தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மனிதகுல விரோதிகளுடன் கூட வாக்குபொறுக்க கூட்டுவைத்துக்கொள்ளும் வை.கோ தமிழ் நாட்டில் அவமானகரமாக நடத்தப்படும் அகதிகளுக்குக் குரல்கொடுத்து விடுவிக்கட்டும்.