அறிமுகம்
இன்று தமிழ்மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆயிரக்கணகானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ‘நூலகம்’ செயற்றிட்டம் – நிறுவனம் என்ற கட்டங்களைத் தாண்டி சமூக இயக்கமாகத் தொழிற்படத் தொடங்கியுள்ளது. பல்வேறு துறை சார்ந்தோர் – பல்வேறு அரசியல் சார்ந்தோர் – பல்வேறு சமூகச் செயற்பாடுகள் சார்ந்தோர் என பல்வேறுதரப்பினரையும் உள்வாங்கியுள்ளதோடு ஆவணப்படுத்தல் என்ற புள்ளியில் ஒன்றிணையக்கூடிய சகல தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இயங்க முயற்சிப்பதை அவதானிக்கலாம். நிறுவனம் என்ற கட்டமைப்பிற்கு வெளியே பிரதேச ரீதியான கட்டமைப்புக்கள், சர்வதேச ரீதியான கட்டமைப்புக்கள் மற்றும் செயற்றிட்டங்கள் சார்ந்த கட்டமைப்புக்கள் என தன்னை விரிவாக்கிக் கொண்டு, சுயாதீனமாக இயங்கக்கூடிய கட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது.
தகவல் வளங்கள் தொடர்பான திறந்த அணுகுமுறை, நூலகவியல் சேவைகள், எண்ணிம ஆவணப்படுத்தல் முயற்சிகள், எண்ணிம உள்ளடக்க உருவாக்கம், தகவன் அறிதிறன், அறிவு முகாமைத்துவம், அபிவிருத்திச் செயற்பாடுகளும் ஆய்வுகளும் ஆகிய வெளிகளில் இயங்குவோரை இணைத்துக் கொண்டும் ஊடாடியும் தனது நகர்வை நெறிப்படுத்த முயற்சிக்கின்றது.
மக்கள் சொத்து
சமூக அசைவியக்கத்தில் இருந்து உருவான – வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல் வளங்கள் அதை உருவாக்கிய மக்களுக்கானவை. அவற்றை வேண்டியபோது பயன்படுத்தவும் பார்வையிடவும் அந்த மக்களுக்கு இருக்கும் உரிமை என்ற புள்ளியில் ஒன்றிணையும் எவரும் அவற்றைப் பாதுகாக்கவே முயற்சிப்பார்கள். ஆவணங்கள் மற்றும் தகவல் வளங்களை தனியுரிமை என்ற புள்ளியைத் தாண்டிப் பொதுவுடமையானதாகக் கருதும் நிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மக்கள் சார்ந்து – சமூகம் என்ற பொதுவுண்மை நிலையில் இருந்து சிந்திக்கும் அனைவரும் உணர்ந்துகொள்வர்.
தற்காலத்தைய முதலாளித்துவ சமூக அமைப்பின் தனியுரிமைக் கருத்துநிலையில், ஆவணங்களும் அறிவும் தனியுரிமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலவரத்தின் பாதகமான அம்சங்களை பொதுச்சமூகம் படிப்படியாக உணர்ந்து கொண்டு வருகின்றது. தனியுடமையாக்கப்பட்டுள்ள அறிவை பொதுச்சமூகவெளியில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய நிலமையைச் சாத்தியப்படுத்த வேண்டியதன் தேவை பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.
அறிவைப் பொதுவுடமையாக்கும் செயல்முறை
தனியுடமையான அறிவைப் பொதுவுடமையாக்க வேண்டியதன் அவசியம் பல்வேறு தரப்பினரால் உணரப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறையில் செயற்படுத்துபவர்கள் ஒருசிலரே. வெவ்வேறு தரப்பட்ட செயற்பாட்டாளர்களும் வெவ்வேறுவிதமான அணுகுமுறையுடன் மேற்கூறிய விடயங்களை அணுகமுற்படுகின்றனர். அணுகுமுறை வேறுபாடுகளைக் கடந்து அறிவைப் பொதுவுடமையாக்கும் அல்லது தகவல் வளங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலையைச் சாத்தியமாக்கல் என்ற ஒத்த புள்ளியில் இணைந்து இயங்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய அதேநேரம் தமது அணுகுமுறைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் உரையாட வேண்டியதும் அவசியமானதாகும்.
சமாந்தரமாக இயங்குபவர்களது அணுகுமுறைகளை கற்றுக் கொண்டிருக்கும் அதேநேரம் தமது அணுகுமுறையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதும் மிக அவசியமானதாகும். இது பொதுப்புள்ளியில் இணைந்து இயங்கும் நிலமையைச் சாத்தியமாக்கும். இவ்வகையான செயல்முறைகள் சட்ட எல்லைக்குள்ள்ளும், சட்ட எல்லையை சில இடங்களில் மீறியும் சட்டதிட்டங்களை முற்றாக நிராகரித்தும் என இயக்கமுறுகின்றன.
சட்ட எல்லை
சட்ட எல்லைகளுக்குள் தமது இயங்குதளத்தை வரையறுத்துக் கொள்வோர் தொடர்பாகப் பார்ப்போமேயானால், தற்போதுள்ள தனியுடமைச் சமூக அமைப்பு என்ற சட்ட எல்லையைக் கருத்தில் கொண்டியங்கும் விடயத்தைக் கூறலாம். காப்புரிமை என்ற விடயப்பரப்பின் எல்லைப்பரப்பிற்குள் நின்று இயங்கக்கூடிய – இயங்கச் சாத்தியமான வெளிகளில் இயங்குதல். தனியுடமையாக்கப்பட்டுள்ள அறிவை ஆவணப்படுத்துவது மிகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. தகவல் வளங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்துவதற்கும் பிரதிசெய்வதற்கும் குறிப்பிட்ட காலப்பகுதிவரைக்கும் இன்றையசட்டம் தடைவிதித்துள்ளது. சட்ட எல்லைகளுக்குள் நின்று கொண்டு செயற்படுவதென்பது மிகவும் வரையறுக்கப்பட்டுள்ள நன்மைகளை மாத்திரமே பெற்றுத்தரக்கூடியது.
சட்ட எல்லைக்கோடுகளை மீறுதலும் மாற்றம் செய்தலும்
இன்றிருக்கும் சட்ட எல்லைகள் எப்போதும் இவ்வாறு இருந்தவையல்ல. வரலாற்றோட்டத்தில் மீறல்கள் காரணமாகவும் மக்களது வேண்டுகோள்கள் – எதிர்ப்புக்கள் காரணமாகவும் படிப்படியாக மாற்றத்திற்குள்ளாகி வந்தவை. இன்றிருக்கும் எல்லைகள் கூட நாளை மாற்றத்திற்குள்ளாகக் கூடியவையே. மக்கள் திரளினது மீறல்கள் புதிய சட்டமாக எதிர்காலத்தில் புதிய எல்லைகளுடன் வரையறுக்கப்படும். அவ்வகையில், மக்கள் நலன் சார்ந்த மீறல்கள் மக்களுடன் இணைந்து மக்கள் திரட்சியை மையமாகக் கொண்டு செய்யப்பட வேண்டியவை. அறிவைப் பொதுவுடமையாக்கும் செயற்பாடுகளாகட்டும் அல்லது தகவல் வளங்களைப் பொதுவெளியில் காட்சிப்படுத்தும் செயற்பாடுகளாகட்டும் இத்துடன் இணைந்த இதர செயற்பாடுகளாகட்டும் அனைத்தும் சமூக இயக்கம் என்ற வகைமாதிரிக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். அவ்வகையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொண்ட சமூக இயக்கம் என்னும் தன்மை ஆகிய இரண்டு தன்மைகளுடன் கூடிய செயற்பாடுகளே மக்கள் சார்பான சரியான இயக்கமாகக் கொள்ளப்படும்.
சமூகவியக்கப் பண்பு
மக்கள் சார்பான இயக்கம் நிச்சயமாக தனிநபரால் செயற்படுத்தப்பட முடியாதது. தனி ஒரு நிறுவனத்தால் சாதிக்கப்பட முடியாதது. மக்கள் சார்பான அதன் சாதகமான அம்சங்களைத் தொடர்ச்சியாக வலியுறுத்துவதன் மூலமும் அதன்பால் ஈர்க்கப்படுவோரைத் தொடர்ச்சியாக இணைத்துக் கொண்டு திரட்சியாகச் செயற்படுவதன் மூலமுமே சரியான திசையில் பயணிக்க முடியும். இவ்வகையான சமூக இயக்கப் பண்பு ஏதோவொருவிதத்தில் அச்செயற்பாட்டிற்கு மக்கள் அங்கீகாரத்தை வழங்குவதோடு மறைமுகமான சட்ட அங்கீகாரத்தையும் வழங்கிவிடுகின்றது. மக்கள் ஆதரவையும் மக்கள் திரட்சியையும் சட்டத்தால் எதுவுமே செய்ய முடியாத நிலமைக்கு உள்ளாக்கிவிடுகின்றது. அதேநேரம், அதை அங்கீகரிக்க வேண்டிய நிலமையையும் சட்டத்திற்கு உருவாக்கிவிடுகின்றது.
அதிகாரத்திற்குச் சார்பான சட்ட எல்லைகள் தொடர்பில் தொடர்ச்சியாக மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு அவர்களை இணைத்துக் கொண்டு இயங்குவதே சட்ட எல்லைகளுக்கு வெளியே மக்கள் சார்பாக இயங்க முற்படுவோருக்கான சிறந்த வழிமுறையாக இருக்க முடியும்.
வெளிப்படைத்தன்மை
மக்கள் சார்பான செயற்பாடுகளை சட்ட எல்லைகளுக்குள் நின்று கொண்டு மாத்திரம் செயற்படுத்திவிட முடியாது. சில இடங்களில் சட்டத்தின் கடினமான சுவர்களை அசைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். இன்னும் சில இடங்களில் சட்டத்துடன் மூர்க்கமாக மோத வேண்டியிருக்கும். அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் சுவர்களை உடைத்தெறிய வேண்டியிருக்கும். தனிநபராலோ அல்லது நிறுவனத்தாலோ சாத்தியமாக்க முடியாத நிலையில் மக்கள் திரட்சியை மாத்திரமே நம்ப வேண்டியிருக்கும். வெளிப்படைத்தன்மையான செயற்பாடுகளாலும் இணைத்துக் கொள்ளும் தன்மையிலான செயற்பாடுகளாலும் மாத்திரமே மக்களை இணைத்துச் செயற்பட முடியும். பல்வேறுதரப்பட்ட மக்களையும் இணைத்துக் கொள்வதற்கு நிச்சயமாக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருப்பவர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
இவ்வகையான வெளிப்படைத்தன்மை சமூக இயக்கமாக அணுகுவதற்கான முன்நிபந்தனையாக அமைவதோடு ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட செயற்பாடுகள் சார்ந்து நெருக்கமாககப் பிணைத்திருக்கும். அதேநேரம், அதிகாரத்திற்கு எதிராக இயங்க வேண்டிய மனநிலையையும் வழங்கிவிடுகின்றது.
பிரச்சனைகள்
மேற்படி பண்புகளை மறுத்தியங்குவது மக்கள் விரோதச் செயற்பாடாகக் கருதப்படுவதோடு அதிகாரம் சட்டத்தின் மூலம் அச்செயற்பாட்டை முடக்குவதற்கும் குறிப்பிட்ட விடயம் சார்ந்து தன்னை மேன்மேலும் இறுக்கிக் கொள்ளவதற்கும் வழிசமைக்கும். உதாரணமாக ரகசிய இயக்கமாக முன்னெடுக்கப்படும் எண்ணிம ஆவணச் செயற்பாடுகள் இதர மக்கள் சார்ந்த எண்ணிம ஆவணச் செயற்பாடுகளையும் முடக்கும் தன்மை கொண்டவை. சமூக இயக்கப் பண்பைக் கொண்டமையாத வெளிப்படையற்ற செயற்பாடுகளுக்கு சமூகத்தில் உள்ள மக்களிடமிருந்தே எதிர்ப்பு வருவதோடு, அவ்விடயம் சார்ந்து இயங்கும் ஏனையோரையும் – அவ்விடயம் சார்ந்து இயங்கும் மக்கள் கூட்டத்தையும் அதிகார வர்க்கத்தின் முன் குற்றவாளியாக்கும் இயல்பு கொண்டது.
நூலகத்தின் செயற்பாட்டியக்கம்
நூலகமானது செயற்றிட்டம் – நிறுவனம் என்ற வெளிகளைக் கடந்து சமூக இயக்கம் என்ற வெளியில் காலடி எடுத்து வைக்க முயற்சிக்கின்றது. இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் வாழும் பல்வேறு பிரதேசங்கள் மற்றும் நாடுகளில் ஆவணப்படுத்தல் இயக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதோடு வெவ்வேறு அரசியல் – சமூகப் பார்வைகள் உள்ளவர்களை இணைத்துக் கொண்டியங்கிக் கொண்டிருக்கின்றது. அதேநேரம், பல்வேறுவகைப்பட்ட சமூகப் பொது நிறுவனங்களைப் பங்காளர்களாக்கிக் கொண்டிருப்பதோடு ஆவணங்களின் உடைமையாளர்களைத் தொடர்ச்சியாகத் தனது செயற்பாட்டியக்கத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றது. குறிப்பிட்ட நபர்களது செயற்பாடுகள் என்ற நிலையைத்தாண்டி நூற்றுக்கணக்கானோரின் செயற்பாடுகளது இணைந்த வடிவம் என்ற நிலையை அடைந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் எழுத்தாளர்கள் இணைந்த கூட்டுச் செயற்பாடு – தமிழ் பேசும் மக்களது கூட்டுச்செயற்பாடு என்ற பரந்த தளத்தை இலக்காகக் கொண்டு நூலகம் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரம், வெளிப்படைத்தன்மை என்ற விடயத்தை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டுவருவதோடு முற்றுமுழுதான வெளிப்படைத்தன்மையான இயக்கம் என்ற புள்ளியைத் தனது இலக்காகக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நூலகதின் முகவரி : www.noolaham.net/
தகவல் : சசீவன்
சிறந்த முயற்சி.