31 – July – 2008
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தது தொடர்பாக அமைச்சர் தொண்டமானுக்கு நுவரெலியா நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விதித்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கி நீக்கியுள்ளார்.
அரசியல் அமைப்பு சட்ட விதிகளின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின்படி ஜனாதிபதி இந்த மன்னிப்பை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா நீதிமன்றம் காலையில் இத்தீர்ப்பை வழங்கியது. ஆனால் மாலையில் ஜனாதிபதியின் மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.
நுவரெலியாவில் உள்ள அலுவலகம் தொடர்பாக இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸுக்கும் இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ். சதாசிவத்துக்கும் இடையிலான பிரச்சினை தொடர்பாக நுவரெலியா நீதிவான் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மீறியதாக இந்த தண்டனை செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜனாதிபதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார் எனத்தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.