விடுதலைப் புலிகளுக்கு போலி பெயரில் சென்னை துறைமுகம் வழியாக ஆயுதம் கடத்தப்பட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வன்னியரசுவை, கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
சென்னை துறைமுகம் வழியாக, இலங்கைக்கு பல்வேறு வடிவில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக, கியூ பிரிவு போலீசாருக்கு 2007ம் ஆண்டில் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, துறைமுகத்தில் சோதனை நடத்தினர். கன்டெய்னர்களில் இலங்கைக்கு செல்லும் பொருட்களை சோதனையிட்ட போது, அதில், பைபர் படகு, இன்ஜின்கள் பெயரில், பல பொருட்கள் போலி பெயர்களில் கடத்தப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், அந்த கடத்தல் சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னியரசுவிற்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, கியூ பிரிவு காவல்துறையினரினால் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு, சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. மூன்று முறைக்கு மேல் வன்னியரசு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததையடுத்து, அவருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை, வன்னியரசுவை கைது செய்த கியூ பிரிவு பொலிஸார், சைதாப்பேட்டை 23வது கோர்ட் மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி முன் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.