ஆப்கானிஸ்தானில் மற்றுமொரு நிகழ்வு அல்லது நாடகம் அல்லது துயர சம்பவம் அல்லது விடுதலை அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தேறிக்கொண்டிருக்கிறது இந்நிமிடம்.தாலிபன்களிடம் காபூல் வீழ்ந்துவிட்டது. ரத்தம் சொட்டாத ஆட்சிமாற்றத்துக்கு அரசுத்தலைவர் அஷ்ரப் கனி ஒப்புக்கொண்டிருக்கிறாராம். தாலிபன்களும் ஒரு ரவுண்டுகூட சுடாமல் கச்சிதமாக அதிகாரத்தைக் கைமாற்றிக்கொள்ளலாம் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.பல ஆண்டுகள் நடந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது. கரோனா வைரஸைவிட மிக வேகமாக பரவி, ஒரே வாரத்தில், ஆப்கனை மீண்டும் தங்கள் கைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் தாலிபன்கள். தினம் ஒரு மாநகரம் அவர்களிடம் வீழ்ந்துகொண்டிருந்த கடந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவும் பிற மேலைநாட்டுப் படையினரும் ஆப்கனில் தங்கள் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்கள்.முன்பொரு முறை தாலிபன்கள் முதன்முதலில் காபூலை முற்றுகையிட்டபோது, 1996 செப்டம்பரில், சோவியத் ஆதரவு அரசாங்கத்தின் தலைவர் நஜீபைக் கொன்று ரத்தவெறி ஆடினார்கள். சோவியத்துக்கு எதிரான அமெரிக்க சதிகள் அரங்கேறிய அக்காலத்தில் மேற்கு ஆசியாவில் எல்லா மதவெறி கும்பலுக்கும் அமெரிக்காதான் ஆதரவுசக்தி.
அல்கொய்தாவும் தாலிபன்களும் முஜாஹிதீன்களும் வளர்க்கப்பட்டது அமெரிக்காவால்தான் என்பது ஊரிறிந்த கதை.தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஷரியத் அடிப்படையிலான ஆட்சியை அறிவித்தார்கள். அதன் பிறகு நடந்ததையும் உலகம் அறியும்.ஆனால் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த 2001 செப்டம்பர் 9க்குப் பிறகு அல் கொய்தா தலைவர்களை ஒப்படைக்குமாறு தாலிபன்களுக்கு அமெரிக்கா கட்டளையிட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிநவீன சுற்றிவளைப்பில், அந்த ஆண்டிலேயே தாலிபன்களின் ஆட்சி காந்தகாரில் வீழ்ந்தது. பிறகு ஏற்பட்ட அமெரிக்க ஆதரவு அரசுகளுக்கும் தாலிபன்களுக்குமான நீண்ட நெடிய மோதல் இருபதாண்டுகள் கழித்து இப்போது முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை நேரடி ஆக்கிரமிப்புக்கான தேவை குறைந்துபோய்விட்டது. அத்துடன் தாலிபன்களும் புதியச் சூழலை புரிந்துகொண்டிருப்பதாலும் காபூல் ஆட்சியாளர்களும் கையறு நிலையில் இருப்பதாலும் இப்போதைய ஆட்சி மாற்றம் சற்றே “நாகரிகமடைந்திருக்கிறது” என்று கூறுகிறார்கள். ஆனால் கைப்பற்றப்பட்ட நகரங்களில் ராணுவ வீரர்கள் படுகொலைசெய்யப்படுகிறார்கள் என்றும் தாலிபன்களை திருமணம் செய்யுமாறு பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.ஏற்கனவே காபூலிலும் பிற நகரங்களிலும் பெண்கள் அழத்தொடங்கிவிட்டார்கள் என்கிற செய்தி ஒருபுறம் வர, பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தாலிபன்கள் அறிவித்துமிருக்கிறார்கள்.
அரசும் சரி தாலிபன்களும் சரி கால ஓட்டத்தில் மாறியிருக்கிறார்களா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும். லோக்கல் யுத்த ரவுடிகளும் இனி தலைதூக்குவார்கள். பஷ்தூன் இன மக்களின் அரசியலும் ஆப்கன் – பாகிஸ்தான் – தாஜிகிஸ்தான் – ஈரான் பகுதியின் புவிசார் அரசியலும் உருவாக்கியுள்ள சமன்பாடுகளைப் புரிந்துகொள்வது நமக்கெல்லாம் சிரமமாக இருக்கலாம். அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நேரடி களமாக மாறியிருக்கும் ஆப்கானிஸ்தானில் தெற்காசியாவின் பேட்டைத் தலைவர் இந்தியாவுக்கெல்லாம் எந்த வேலையும் இல்லை என்று தெரிகிறது. உலக அரசியலில் இப்போதெல்லாம் இந்தியாவின் கருத்து, நிலைப்பாடுகெல்லாம் எந்த மதிப்பும் கிடையாது என்கிற உண்மைதான் இப்போது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது. “நீ ஆட்டத்தில் இல்லை போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது. அது ஒரு விதத்தில் நல்லதுதான். பாவம் ஆப்கனையும் இணைத்து அகண்ட பாரதக் கனவுகாணும் ஆர் எஸ் எஸ்ஸுக்குத்தான் இது சற்றே சங்கடமானது. வீழ்ச்சியடையும் தற்போதைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவோடு நேசம் காட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் கவலைப்படுவதெல்லாம் ஆப்கானிஸ்தானின் சாதாரண மக்களை நினைத்துத்தான்.