ஆப்கானிஸ்தான் தலை நகரம் காபூலில் மைய பகுதியிலுள்ள ஐ.நா. சபை விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில் ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் பலியா னார்கள். 9 பேர் காயம் அடைந்தனர்.
தனியாருக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலையே ஐநா அதிகாரிகள் விருந்தினர் மாளிகையாக மாற்றியிருந்தனர். இங்கு ஐ.நா. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கி இருந்தனர். இவர்களுடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளும் தங்கி இருந்தனர்.
இந்த விடுதிக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் குறிவைத்து இருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் பலத்தபாது காப்பையும் மீறி இன்று காலை 7.00 மணியளவில் தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் 3 பேர் இந்தமாளிகைக்குள் புகுந்தனர். அப்போது ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 100 பேர் அங்கு இருந்தனர்.
தீவிரவாதிகளைப் பார்த்ததும் அவர்களை நோக்கி பாது காப்புபடையினர் சுட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விட்டு உள்ளே அதிரடியாக புகுந்தனர்.
கையில் இயந்திரத் துப்பாக்கிளை ஏந்தி வந்த அவர்கள் எதிரில் வந்தவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.
தீவிரவாதிகள் புகுந்து விட்டதை அறிந்ததும் ஐ.நா. அதிகாரிகளும், ஊழி யர்களும் அறைக்குள் ஓடிச் சென்று மறைந்து கொண்டனர். ஆனால் தீவிரவாதிகள் வெடிகுண்டு ஒன்றை வீசி, கதவுகளை உடைத்து, உள்ளே சென்று அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சிலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.
தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் பலியானார்கள். 9 பேர் காயமடைந்தனர்.
வெடிகுண்டு வீசி தாக்கியதால் கட்டிடத்தில் ஒரு பகுதியில் தீப்பிடித்து கொண்டது. இதனால் அந்தபகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
தாக்குதல் நடந்த இடத்துக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து நின்று தாக்கினர். இருதரப்புக்குமிடையே கடும் மோதல் இடம்பெற்றது.
நீண்ட நேர மோதலுக்குப் பிறகு 3 தீவிரவாதிகளையும் படையினர் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு விருந்தினர் மாளிகை பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்தத் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாரித் செய்தி நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு பேசிய போது, “ஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலுக்கு உதவியதால் ஐ.நா. விருந்தினர் மாளிகையைத் தாக்கி இருக்கிறோம். இது எங்கள் முதல் தாக்குதல். மேலும் தாக்குதல்கள் தொடரும்” என்று கூறினார்