ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் திரட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
நோட்டோ படைவீரர்கள் மற்றும் தலிபான் தீவிரவாதிகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பல தரப்பினர் கோரி வருவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைவர் லுயிஸ் மெர்னொ குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையோ அல்லது ஆப்கானிஸ்தானோ கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதென குறித்த நாடுகள் தெரிவிக்கும் பட்சத்திலேயே சர்வதேச நீதிமன்றம் இதில் தலையீட முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.