கடந்த ஜூலை 2-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்ஸல் தலைவர் செர்குரி ராஜ்குமார் என்கிற ஆஸாத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவரோடு ஆந்திராவைச் சார்ந்த முற்போக்கு ஊடகவியலாளரான ஹேமசந்திர பாண்டே வும் கொல்லப்பட்டார். இருவரையுமே மாவோயிஸ்ட் தீவீரவாதிகள் என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவம் எத்தகைய சூழலில் நடத்தப்பட்டது என்பதை முழுவதுமாக விசாரிக்குமாறு யுனெஸ்கோ அமைப்பின் இயக்குநர் இரினா போகோவா வலியுறுத்தியுள்ளார். பல்வேறு ஹிந்தி நாளிதழ்களுக்கு செய்தி அளித்துவந்த பாண்டே, போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்குமாறு ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இரினா குறிப்பிட்டார். ஜூலை 4-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஹேமசந்திர பாண்டேயின் மனைவி பபிதா, தனது கணவர் ஜூன் 30-ம் தேதி நாகபுரிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், ஆனால் கடந்த நான்கு நாள்களாக செல்போன் மூலம் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் குறிப்பிட்டார். இதனிடையே போலீஸ் என்கவுன்ட்டரில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்திடம் பபிதா கோரிக்கை வைத்தார். இதையடுத்து இக்கோரிக்கை யுனெஸ்கோவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பிரச்னையை முழுமையாக விசாரிக்குமாறு யுனெஸ்கோ ஆந்திர அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. பத்திரிகை சுதந்திரம் பாதுகாப்பது தொடர்பாக தொடர்ந்து ஆதரவுக் குரல் கொடுக்கும் அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.