ஆந்திராவின் மிகப்பெரிய அணைகளுள் ஸ்ரீசைலம் அணையும் ஒன்று. இந்த அணையில்தான் கிருஷ்ணா தண்ணீர் தேக்கப்பட்டு கண்டலேறு அணைவழியாக சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இந்த அணையின் நீர்மட்டம் 885 அடி உயரமாகும். கடந்த சில நாட்களாக கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளநீர் முழுவதும் ஸ்ரீசைலம் அணையில் பாய்ந்ததால் ஒரே நாளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவிட்டது. நேற்று கொள்ளளவை விட 7 அடி உயரம் அதிகமாக தண்ணீர் நிரம்பி வழிந்தது.
இன்றும் அணைக்கு நீர்வரவு பல மடங்கு அதிகமாக இருப்பதால் அதை உடனடியாக வெளியேற்ற முடியாமலிருப்பதாகக் கூறப்படுகின்றது. அணையின் அனைத்து மதகுகளையும் திறந்து விட்டும் கூட அணையின் நீர்மட்டம் குறையவே இல்லை. இதனால் ஆந்திர நீர்ப்பாசன அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
இன்று அணைக்கு 22 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது. ஆனால் அனைத்து மதகுகள் மூலம் வெறும் 10 லட்சம் கனஅடி தண்ணீர்தான் வெளியேற்ற முடிகிறது. கர்நாடக அரசு அங்குள்ள அணைகள் நிரம்பியதால் அவற்றை திறந்து விட்டுள்ளனர். இதனாலும் ஸ்ரீசைலம் அணைக்கு அதிக அளவில் வெள்ளநீர் வருகிறது.
ஸ்ரீசைலம் அணையில் இருந்து முழு அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணா நதிக்கரையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொதிகளை மாநில அரசு வழங்கி வருகிறது.
ஆந்திர நீர்ப்பாசன அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஸ்ரீசைலம் அணை பலமான நிலையில்தான் உள்ளது. ஆனால் தற்போது நீர்வரவு மிக அதிகமாக இருப்பதால் எங்களுக்கு பயமாக உள்ளது. இந்த அணை உடைந்தால் ஆந்திராவின் பல பகுதிகள் அழிந்து விடும். எனவே நாங்கள் அணையின் அனைத்து மதகுகளையும் திறந்து விட்டுள்ளோம்” என்றார்