இந்த மாதம் 9ம் தேதி, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக பதிவு செய்யப்பட்டு விட்டது. 13 ஆண்டு கால, மிக நீண்ட காத்திருப்புக்கு பின், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, வெற்றிகரமாக ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட நாள் இது. நம் நாட்டில் 50 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு அரசியல் ரீதியாக போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. பார்லிமென்டிலும் சரி, மாநில சட்டசபைகளிலும் சரி, பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்களின் வாரிசுகள் என்ற ரீதியில் தான், பெண்களுக்கு அரசியலில் அங்கீகாரம் கொடுக்கப் பட்டது. பெண் சுதந்திரம் பற்றி வீராவேசமாக மேடைகளில் முழங்கிய அரசியல்வாதிகள் கூட, இந்த விஷயத்தில் அடக்கி வாசித்தனர்.
இரும்புத் திரை: தங்களைச் சுற்றி மிக பிரமாண்ட முறையில் எழும்பியிருக்கும் இரும்புத் திரையை தகர்த்துக் கொண்டு வெளியில் வருவதற்கு, ஏராளமான பிரச்னைகளை பெண்கள் சந்திக்க வேண்டியிருந்தது. குறிப்பாக, இந்திய அரசியலில் ஆண்டாண்டு காலமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் அரசில்வாதிகள், தங்கள் அதிகாரத்தில் பெண்கள் பங்கு கேட்பதை, சுத்தமாக விரும்பவில்லை. பெண்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று குரல் எழும்பிய போதெல் லாம், ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கை கூறி, அடக்கி விட்டனர்.
மசோதா வரலாறு: கடந்த 1993ல், உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, 1998ல், தேவகவுடா பிரதமராக இருந்தபோது, பார்லிமென்ட்டில் அறிமுகம் செய்யப் பட்டது. இதற்கு பின், 1998, 1999, 2002 மற்றும் 2003ல், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், சில அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, அதை நிறைவேற்ற முடியவில்லை.
பெண்களின் செல்வாக்கு: இந்த சூழ்நிலையில் தான், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பதவியேற்றார். ஆளும் கூட்டணியின் தலைவர், சபாநாயகர், லோக்சபா எதிர்க்கட்சி துணை தலைவர் என, அனைத்து முக்கிய பதவிகளிலும் முறையே சோனியா, மீரா குமார், சுஷ்மா சுவராஜ் என்ற பெண்கள் வசம் வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா கராத், ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். பெண்கள் மசோதாவை நிறைவேற்றுவதற்கு இந்த கூட்டணி, பெரிதும் உதவியது. இதையடுத்துத் தான், கடந்த 9ம் தேதி, ராஜ்யசபாவில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள் ளது. அமளி, மசோதா நகல்கள் கிழிப்பு, மைக் உடைப்பு, துணை ராணுவப் படையினரின் வருகை போன்ற ரகளைகளுக்கு இடையே தான், இந்த மசோதாவை நிறைவேற்ற முடிந்தது.
உள் ஒதுக்கீடு? லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி போன்ற கட்சிகள், பெண்கள் மசோதாவை தற்போதுள்ள நிலையிலேயே நிறைவேற்றக் கூடாது என, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “லோக்சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப் பட்டால், ஒரு கை பார்ப் போம்’ என்ற முடிவுடன் அவர்கள் உள்ளனர். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கு, அவர்கள் கூறும் காரணம் இது தான்: பெண்கள் மசோதாவை தற்போதுள்ள நிலையிலேயே நிறைவேற்றக் கூடாது. இதனால், மேல் தட்டு பெண்கள் மட்டுமே பயன் பெறுவர். முஸ்லிம், தலித் மற்றும் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் இதனால் பாதிக்கப்படுவர். எனவே, முஸ் லிம், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த, அடித்தட்டு நிலையில் வசிக்கும் பெண்களுக்கு இந்த மசோதாவில் உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், உள் ஒதுக்கீடு என்ற விவகாரத்தை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
கிராமப்புற பெண்களின் பரிதாப நிலை: “இந்தியா வல்லரசு நாடு’என, அரசியல்வாதிகள் “பில்டப்’கொடுத்துக் கொண்டிருந்தாலும்,நம் நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான அளவிலான மக்கள், இன்னும் வறுமைக் கோட்டுக்கு கீழ் தான், வசிக்கின்றனர். அதிலும், கிராமப்புறத்தில் வசிக்கும் பெண்களும், பெண் குழந்தைகளும் தான், வறுமையின் பிடியில் அதிகம் சிக்கித் தவிக்கின்றனர். ஒரு குடும்பம் வறுமையில் வாடுகிறது என்றால், அந்த குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளில் கல்விக்கு தான் முதலில் முற்றுப் புள்ளி வைக்கப்படுகிறது. இதோ, தற்போது ராஜ்யசபாவில் பெண்கள் மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பான விஷயம் பற்றி எல்லாம், இந்த அப்பாவி ஜீவன்களுக்கு எதுவும் தெரியாது. பகலில் கூலி வேலை, இரவில் குடிகார கணவர்களின் அடி உதை, இது தான், அவர்களின் உலகம். இந்த அடிமை விலங்கில் இருந்து, அவர் களை மீட்டுக் கொண்டு வருவதற்கு, இந்த இட ஒதுக்கீடு எந்த அளவுக்கு உதவப் போகிறது என, தெரியவில்லை. ஏ�ன்றால், பெண்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர், அதாவது படித்தவர்கள் மற்றும் மேல் தட்டு பெண்கள் மட்டுமே பயன் பெறுவதை, முழுமையான பெண் சுதந்திரம் என, கூறி விட முடியாது, என்ற வாதத்தை ஓரளவு ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
தடைகளை தாண்டுமா? ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது முதல் கட்ட வெற்றி தான். லோக்சபா, ஜனாதிபதியின் ஒப்புதல், இறுதியாக மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படுதல் என, பல தடைகளை இந்த மசோதா கடந்து வர வேண்டியுள்ளது. லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., ஆதரவு தெரிவித்து இருந்தாலும், அந்த கட்சியை சேர்ந்த சில எம்.பி.,க்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அதற்கு ஆதரவாக ஓட்டளிக்கும்படி கொறடா உத்தரவு பிறப்பிக்க கூடாது, மனச்சாட்சிப்படி ஓட்டளிக்கலாம் என, உத்தரவிட வேண்டும்’ என, அவர்கள் முணுமுணுக்க துவங்கியுள்ளனர். இதனால், பா.ஜ., மேலிடம் இந்த விஷயத்தில் யோசிக்க துவங்கியுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன், பா.ஜ.,வும் சேர்ந்து கொண்டால், லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை கூற முடியாது. இந்த தடைகளை எல்லாம், கடந்து மசோதா வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், அது, இந்திய வரலாற்றில் ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய நிகழ்வாகவே இருக்கும். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்புவோம்.
கட்சிகள் மனது வைத்தால் சட்டமே தேவையில்லை: “அரசியல் கட்சிகள் மனது வைத்தால், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக பார்லிமென்ட்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டம் கொண்டு வரப்பட வேண்டிய அவசியமே இல்லை’ என்பது, ஒரு தரப்பினரின் ஆணித்தரமான கருத்தாக உள்ளது. இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது சில அரசியல் கட்சிகள் உள் ஒதுக்கீடு என்ற விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் சில அரசியல் கட்சிகள், இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுவதற்கு தாங்கள் தான் காரணம் என, பெருமையடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இதற்காக இத்தனை பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, உண்மையிலேயே இந்த அரசியல் கட்சிகள் விரும்பினால், 33 சதவீதம் என்ன, 50 சதவீதம் கூட,அவர்களுக்கு ஒதுக்கலாம். ஒவ்வொரு அரசியல் கட்சியும், தேர்தலின்போது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்போது, அதில் 33 சதவீதத்தையோ, 50 சதவீதத்தையோ பெண்களுக்கு ஒதுக்கலாம். இதில் தங்கள் விரும்பியபடி, முஸ்லிம், தலித், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கலாம். அரசியல் கட்சிகள் மனது வைத் தால், இது சாத்தியமே. ரகளை, மசோதா, அடிதடி, ஆதரவுக்கு கெஞ்சல், ஒப்புதல் போன்ற விஷயங்களுக்கு அவசியமே இருக்காது. ஆனால், எத்தனை அரசியல் கட்சிகளுக்கு, இந்த தாராள மனது இருக்கிறது?
அலங்கார பொம்மைகளா? நாடு முழுவதும் உள் ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் களாக உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தை பொறுத்தவரை 12 ஆயிரத்து 618 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 4,075 ஊராட்சிகளில் பெண்கள் தான், தலைவர்களாக உள்ளனர். இருந்தாலும், இவர்களில் பெரும்பாலானோர், தங்களின் கணவர் அல்லது மகன் அல்லது குடும்பத்தின் மற்ற ஆண் உறுப்பினர்களின் கட்டுப் பாட்டில் தான் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஆவணங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து போடும் வேலையை மட்டுமே இவர்களில் பெரும்பாலானோர் செய்து வருவதாகவும், சபையை நடத்துவது, நிர்வாக ரீதியான உத்தரவுகளை பிறப் பிப்பது போன்ற பணிகளை அவர்கள் கணவர் அல்லது மகன்கள் தான் செய்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் ஒரு சில பெண்கள், தனித்து செயல் பட விரும்பினாலும், அவர் களது கணவர் அதற்கு அனுமதி அளிப்பது இல்லை. மொத்தத் தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் பெண்களில் சிலர், வெறும் பொம்மைகளாகவே செயல்படுகின்றனர் என, பெண் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும், ஆண் ஆதிக்க சமுதாயம் அதை பொருட்படுத்துவது இல்லை என்பது தான், கசப்பான உண்மை.
THANKS:Dinamalar.