ஆட்காட்டிக் குருவிகள்
அமைதியாய் இருக்கின்றன.
பெருநிலத்தின் தரவையெங்கும்
ஆர்ப்பரித்துப்பறந்த அக்குருவிகள் அமைதியாய் இருக்கின்றன.
இந்த பொட்டல்வெளிகள்
பெருவெடிப்புகளின் அவலம் சுமந்தவை
கொப்புளிக்கும் குருதி சதைக்குவியல்களை உள்வாங்கி
கொலையுண்ட ஆன்மாக்களின் கடைசி மூச்சை உள்வாங்கியவை
பெருநிலத்தின் தரவையெங்கும் ஆட்காட்டிக் குருவிகள்
அமைதியாய் இருக்கின்றன.
எங்கள் முள்ளந்தண்டுகளை உருவி கொடியேற்றம் கண்டவர்கள்
எங்கள் மூச்சுக் காற்றில் கோலோச்சியிருக்கிறார்கள்
எங்கள் ஏக்கங்களில் தங்கள் பைகளை நிரம்பியிருக்கிறார்கள்
எங்களை ஏவல் செய்யவும்
எங்களை அடிமை செய்யவும்
எங்களைப் பெண்டாளவும்
சர்வதேசம் தந்த அங்கீகாரம் அவர்களுக்கு
பாதிவழி ஓர்வழியில் சென்று மீதி வழிதடுமாறும் இனம் இது
வந்தவனுக்கெல்லாம் வெற்றிலை மடித்துக் கொடுத்து
அரையிலாடை அவிழ்வது கூடத்தெரியாது பொய்மானின் பின்னேயோடி
புரள்கிறது இந்த இனம்
பெருநிலத்தின் தரவையெங்கும் ஆட்காட்டிக் குருவிகள்
அமைதியாய் இருக்கின்றன.
செத்தவனுக்கு சுண்ணமிடிக்கவும்
பாடைகட்டி பரதேசம் அனுப்பி
ஆண்டுத் திவசம் செய்யவும்
அடுத்தவனிடம் அனுமதி கேட்டுக் காத்திருக்கிறது இந்த இனம்
அமைதிக்கனுப்பிய புறாவை கறிசமைத்துண்டுவிட்டு
ஒரிறகைப்பிடுங்கி தொப்பிலணிந்துகொண்டு
சமாதானமாய் வாழ்வோமென்கிறார்கள்
பெரிய அக்கப்போரன்றோ இது.
ஐந்தாண்டாய் அந்தரித்த வாழ்வு
நெருப்புத்தின்று கிடக்கிறது
உண்ணமட்டும் வாய்திறந்து
உதறமட்டும் காலெடுத்து
மூத்திரம் பெய்யவே முந்நூறு சாத்திரம் பார்த்து
எந்திரமாய் போகிறது இழவு வாழ்க்கை
என்ன இழிவடா இது
எமது நிலமென்று நடக்கமுடிகிறதா
எமது கடலென்று இறங்க முடிகிறதா
செம்மண் பரப்பெல்லாம் கொத்திப்பேய் வெள்ளாமை செய்ய
கொத்தாய் குலையாய் வாரிக்கொடுத்த இனம்
கொட்டாவி விட்டுக் காத்திருக்கிறது
ஐந்துவருடமாய் அசுமாத்தமேனும் தெரிகிறதாவென்றால்
இல்லை
இல்லவே இல்லை
இடைக்கிடை புகைகிறதே தவிர எரிகிறதாய் இல்லை
முளைவிட்டது கண்டாலே முளாசிவிடுகிறார்கள் அவர்கள்
பெருநிலத்தின் தரவையெங்கும் ஆட்காட்டிக் குருவிகள்
அமைதியாய் இருக்கின்றன.
வெட்டித்தள்ளியவனும் சுட்டுப் பொசுக்கியவனும்
எங்கள் நிகழ்வுகளில் விழாக்களில்
வேண்டாத விருந்தாளிகளாய்
அவன் கைகுலுக்க கைகள் நீட்டுகிறான்
திடுக்கிட்டுப்போகின்றோம்
நீட்டிய கைகண்டு கூசுகிறது மேனி
எவ்வளவு இரத்தக்கறைகள்
சோதரர் மார்பை கிளித்தகையன்றோ இது
தாய்மாரை பதம் பார்த்து வதம் செய்த கையன்றொ
குலுக்கென்றால் முடியுமா
கூச்சமேனும் இல்லை
முடிதான் கழன்று விழுந்தது
முள்ளந்தண்டின்னும் முறியவில்லையே
பன்றிக்காய்ச்சல் வந்தவனுடன்
படுத்துறங்கென்றால் முடியுமா
அதிகம் படித்த எம்மில் சிலர்
பேராசிரியர்களும் அவர்களில் சிலராம்
அடிமையாய் இருத்தலே சுகமென்றலைகிறார்கள்
நெருப்பாய் தகிக்கிறது நெஞ்சு
பொறிக்குள் அகப்பட்ட எலியாய் அலைகிறது மனம்
இலைசொரிந்து மொட்டை மரமாகி
எழிலழிந்து கிடக்கிறது எம் வாழ்வு
நில் என்கிறான் ஒருவன் செல் என்கிறான் மற்றொருவன்
உலைக்களமாய் உள்ளே கொதிக்கும் உள்ளத்தை
அடக்கென்றால் எப்படி அடக்குவது
பெருநிலத்தின் தரவையெங்கும் ஆட்காட்டிக் குருவிகள்
அமைதியாய் இருக்கின்றன.
ஓ…..!
உங்களுக்காய் ஒரு துளிக்கண்ணீரை
ஒரு தீபமேனும் ஏற்ற
சட்டக்கோவையில்
விதியில்லையாம்.
சித்தார்த்தன் பூமியில்
துட்டகைமுனுவின் நீதியைக்கூட எதிர்பார்க்கமுடிவில்லை.
காத்திருக்கிறோம்
குனிந்த தலைகள் நிமிரும்
எங்கள் கைளும் முறுக்கெறும்
பாதிவழிப்பயணம் மீதிவழி தொடரும்
அதுவரை நிம்மதியாய் தூங்குங்கள்.
ச. நித்தியானந்தன்